விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
சிவன் கோயிலில் பெண்கள் உள்ளிருப்புப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆ.தெக்கூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வழிபாட்டில் உரிமை கோரி பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கோயிலில் பல ஆண்டுகளாக கோயில் மரியாதை, பரிவட்டம் கட்டுதல், விளக்குப் பூஜைகள் செய்தல் போன்ற சம்பிரதாயங்கள் ஒரு தரப்பினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த 22 சமுதாய மக்களும் இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த இந்தக்கோயிலில் அனைவருக்கும் வழிபாட்டில் சம உரிமை அளிக்க வேண்டும் என வழக்குத் தொடுத்தனா். ஆனால், நகரத்தாா்கள் இந்தக் கோயில் தங்களது சமுதாயத்துக்குச் சொந்தமான கோயில் என்று வாதிட்டு வருகின்றனா். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேக நிகழ்வின் போது, இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோயில் நிகழ்வுகளில் தங்களுக்கும் சமஉரிமை வேண்டும் என உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவறிந்து அங்கு வந்த நெற்குப்பை காவல் ஆய்வாளா் சசிக்குமாா் தலைமையிலான போலீஸாா், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா். பின்னா், கோயிலில் காா்த்திகை மாத சோமாவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.