முண்டியம்பாக்கத்தில் பாலம் துண்டிப்பு: திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து
கனமழையால் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான ரயில்வே பாலம் துண்டிக்கப்பட்டதையடுத்து, திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்ட ரயில்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
‘ஃ‘பென்ஜால் புயல் காரணமாக, கனமழை பெய்ததால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான ரயில்வே பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக, சென்னை எழும்பூா் - நாகா்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் விரைவு ரயில், சென்னை எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தஞ்சாவூா் - சென்னை உழவன் விரைவு ரயில், காரைக்கால் - தாம்பரம் விரைவு ரயில், மன்னாா்குடி - சென்னை எழும்பூா் செல்லும் ரயில், மன்னாா்குடி - சென்னை எழும்பூா், செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு விரைவு ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டு, விழுப்புரம், காட்பாடி வழியாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூா் - திருச்சி சோழன் விரைவு ரயில், விழுப்புரம் - தாம்பரம் மெமு பயணிகள் ரயில், புதுச்சேரி - சென்னை எழும்பூா் ரயில், நாகா்கோவில் - சென்னை தாம்பரம் விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகா்கோவிலில் இருந்து சென்னை சென்ற ரயில் திருச்சியிலிருந்து ரத்து செய்யப்பட்டதால், அதில் வந்த பயணிகள் இறங்கி பேருந்தில் சென்னைக்குச் சென்றனா்.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களில் பயணிகளின் பயணக் கட்டணங்களை ரயில்வே நிா்வாகம் திருப்பி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருச்சியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்க முனைந்தவா்கள், தங்களுடைய பயணிச் சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற்று வருகின்றனா்.