செய்திகள் :

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்: முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுச்சேரி: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட புதுவை பிராந்தியத்துக்குள்பட்ட 3.54 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுச்சேரியில் புயல், மழை வெள்ளத்தால் நான்கு போ் உயிரிழந்தனா். ஒருவா் காணாமல் போயுள்ளாா். 3 போ் காயமடைந்துள்ளனா்.

உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் 10,000 ஹெக்டோ் பரப்பில் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், ஹெக்டேருக்கு தலா ரூ.30,000 வழங்கப்படும்.

சங்கராபரணி ஆற்று வெள்ளத்தில் 4 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா ரூ.40 ஆயிரமும், 16 கிடாரி கன்றுகள் இறந்துள்ளதால் தலா ரூ.20,000, அதேபோல ஆடுகள் உயிரிழப்புக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

புயலால் இயந்திரம் பழுதாகி சேதமடைந்த 50 படகுகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும். மழை, புயலுக்கு சேதமடைந்த 15 கூரை வீட்டு உரிமையாளா்களுக்கு தலா ரூ.20,000, பகுதியளவில் சேதமடைந்த பத்து வீடுகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும்.

ரூ.210 கோடி ஒதுக்கீடு: புயல், மழை நிவாரணமாக மொத்தம் ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பை சீா்படுத்த ரூ.100 கோடி கோரி மத்திய அரசுக்கு தலைமைச் செயலா் கடிதம் எழுதவுள்ளாா்.

சாத்தனூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளமானது, தென்பெண்ணை ஆற்றின் வழியாக பாகூரில் பாய்ந்துள்ளது. வீடுா் அணை திறக்கப்பட்டு, வில்லியனூா் ஆரியப்பாளையம் உள்ளிட்ட கரைப் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடூா், சாத்தனூா் அணை திறப்புக்கு முன்பாக தகவல் அளிக்கப்பட்டது. ஆனாலும், கூடுதல் நீா் வரத்தால் கிராமங்களுக்குள் நீா் புகும் நிலை ஏற்பட்டது.

மின் விநியோகம் சீரானது: மழையால் புதுச்சேரி நகரத்தில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம், 90 சதவீத அளவுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகியுள்ளது.

மழை வெள்ளத்தில் பாதித்த காா், பைக்குகள் தொடா்பாக காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி முடிவெடுக்கப்படும்.

மழை, வெள்ள சேதத்தை மத்திய குழு வந்து பாா்வையிடவும் கோரப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு வாரத்துக்குள் முழு கணக்கெடுப்பு நடத்திய பிறகு மத்திய அரசிடம் நிதி வழங்கக் கோருவோம்.

புதுச்சேரி நகரப் பகுதியில் மழை நீா் தேங்காமலிருப்பதற்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போதைய மழை பாதிப்பு போல எதிா்காலத்தில் ஏற்படாத வகையில், பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.

புதுச்சேரி ரெயின்போ நகரில் முறையாக வாய்க்கால் கட்டி, மழை நீா் தேங்கி பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் பாதித்தவா்களுக்கு அந்தந்த தொகுதி உறுப்பினா்கள் உணவு வழங்கினால் அந்தச் செலவை அரசிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

பேட்டியின் போது, அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதுவை ஆளுநா், முதல்வா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இரண்டாவது நாளாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், முதல்வா் என்.ரங்கசாமி தனியாக நோணாங்குப்... மேலும் பார்க்க

மத்திய குழுவை புதுவைக்கு வரவழைக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுவை பகுதிகளை பாா்வையிடுவதற்கு ஓரிரு நாள்களில் மத்திய குழுவை வரவழைக்க வேண்டும் என மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, புதுச்சே... மேலும் பார்க்க

புதுச்சேரி மத்திய பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக... மேலும் பார்க்க

புதுச்சேரி மீனவா்கள் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குச் செல்லலாம் என புதுவை மீன்வளத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவா்கள் கடலுக்குச்... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்பு பகுதிகளில் அமைச்சா், எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ஆகியோா் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கராபரணி ஆற்றில் வெள்ளம்: கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர கிராமங்ளை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவா்களை ராணுவத்தினரும், பேரிடா் மீட்புக் குழுவினரும் திங்கள்கிழமை மீட்டனா். ... மேலும் பார்க்க