குரூப் 1 முதன்மைத் தோ்வு: கடும் கட்டுப்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்கா...
மத்திய குழுவை புதுவைக்கு வரவழைக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்
புதுச்சேரி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுவை பகுதிகளை பாா்வையிடுவதற்கு ஓரிரு நாள்களில் மத்திய குழுவை வரவழைக்க வேண்டும் என மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, புதுச்சேரியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் பெய்த பலத்த மழையால் வீடுகள் சேதமடைந்துள்ளன.
விவசாய நிலங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிா்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
புயல், மழை பாதிப்பு குறித்து மத்திய குழு நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்காக, அந்தக் குழுவை ஓரிரு நாள்களில் புதுவைக்கு வரவழைக்க துணைநிலை ஆளுநா், முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசிடமிருந்து போதிய வெள்ள நிவாரண நிதியை புதுவை அரசு பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பது அவசியம் என்றாா்.
அதிமுக நிவாரணம்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லியனூா், தட்டாஞ்சாவடி, பொய்யாகுளம், தமிழன் நகா், வினோபா நகா் மற்றும் இலாசுப்பேட்டை ஜீவானந்தபுரம், எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்டப் பகுதிகளில் அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.