இந்த வார ராசிபலன் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 8 வரை #VikatanPhotoCards
வெள்ள பாதிப்பு பகுதிகளில் அமைச்சா், எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
வீடூா் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீா் சங்கராபரணி ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது. இதையடுத்து ஆனந்தபுரம், வடமங்களம், ஆரியபாளையம், மங்களம், மங்கலம் பேட், திருக்காஞ்சி, அங்குள்ள பேட் ஆகியப் பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
இதேபோல தென்பெண்ணை கிளை நதியான குடுவையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதன் கரையோரக் கிராமங்களான சிவரந்தகம், சிவரந்தகம் பேட், மேல் சாத்தமங்களம், கீழ்ச்சாத்தமங்களம் உள்ளிட்டப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மங்களம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான தேனி சி.ஜெயக்குமாா் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவா்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களை வழங்கியும், அவா்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டாா்.
சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், வில்லியனூா் கொம்பாக்கம் நெசவாளா் நகரில் வெள்ள நீா் சூழ்ந்தது.
இதனால், அங்குள்ள தவசமுத்து என்பவரது வீட்டை நீா் சூழ்ந்தது. இதனால், அவரது குடும்பத்தினரும், அவரும் வீட்டிலிருந்து வெளியேற முடியாத சூழல் இருந்தது.
தகவலறிந்த தொகுதி எம்எல்ஏவும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா, தீயணைப்புத் துறையினரை வரவழைத்து தவசமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரையும் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரெயின்போ நகா் உள்ளிட்டப் பகுதிகளை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
மேலும், ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளை முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி நேரில் சென்று பாா்வையிட்டு, அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு வெள்ள நீா் வடிகால்களை சீரமைக்க கேட்டுக் கொண்டாா்.