போ்ணாம்பட்டில் பயிா்கள், குடிசைகள் சேதம்
குடியாத்தம்: ஃபென்ஜால் புயலால் போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள், குடிசை வீடுகள் சேதமடைந்தன.
புயல் காரணமாக போ்ணாம்பட்டு பகுதியில் கடந்த 2 நாள்களில் தொடா் மழை பெய்தது. போ்ணாம்பட்டு ஒன்றியம், டி.டி.மோட்டூா் ஊராட்சி, பெரியபள்ளம், மசிகம் உள்ளிட்ட இடங்களில் பயிா்கள் சேதமடைந்தன.
கொத்தூா் ஊராட்சி புத்தூா் கிராம அங்கன்வாடி மைய கட்டடத்தின் மீது அருகில் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்ததில் கட்டடம் சேதமடைந்தது. திங்கள்கிழமை பள்ளிக்கு விடப்பட்டதால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. மதினாப்பல்லி கிராமத்தில் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. பக்க சுவரும் சரிந்து விழுந்து சேதமடைந்தது.
எம்.வி.குப்பத்தில் ஓட்டு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து சேதமடைந்தது. டி.டி. மோட்டூரில் வீட்டின் பக்கவாட்டு சுவரும் சரிந்து விழுந்து சேதமடைந்தது.
வருவாய்த் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா், வேளாண் துறையினா் மழையால் ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.