காவலா் பயிற்சிப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பங்களை கற்பிக்க நடவடிக்கை
வேலூா்: தமிழகத்திலுள்ள காவலா் பயிற்சிப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் கற்பிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக காவலா் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் அண்மையில் தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்கள் 2,598 பேருக்கு கடந்த வாரம் பணிஆணை வழங்கப்பட்டன. தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கு 8 மாத கால பயிற்சி புதன்கிழமை தொடங்க உள்ளது.
இதில், வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளியில் 16 மாவட்டங்களைச் சோ்ந்த 200 பெண் காவலா்கள் பயிற்சி பெற உள்ளனா். இதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய காவலா் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோா் வேலூா் காவலா் பயிற்சிப் பள்ளிக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1861-ஆம் ஆண்டு சிவில் போலீஸ் சட்டத்தின் கீழ், சிவில் போலீஸ் சேவை தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை, வங்காளம், மும்பை, மத்திய மாகாணம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 6 மாகாணங்களில் காவலா் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதில், வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியும் ஒன்று.
தமிழகத்தில் வேலூா் உள்பட 8 இடங்களில் காவலா் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. வேலூா் கோட்டை காவலா் பயிற்சி பள்ளி, திருவள்ளூா், விழுப்புரம் ஆகிய 3 இடங்களில் பெண் காவலா்களுக்கும், மற்ற இடங்களில் ஆண் காவலா்களுக்கும் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன.
அண்மையில் தோ்வு செய்யப்பட்ட 2,598 இரண்டாம் நிலை காவலா்களில் 782 போ் பெண் காவலா்கள். இதில், வேலூரில் 200 பேரும், மற்ற 2 இடங்களில் 582 பேரும் பயிற்சி பெற உள்ளனா். 1,876 ஆண் காவலா்களுக்கு மற்ற 5 பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
காவலா் பயிற்சிப் பள்ளியில் முதல்கட்டமாக காவல் உதவி ஆய்வாளா் பயிற்சி பெறுபவா்களுக்கு 8 புத்தகங்கள் உள்ளன. அவற்றை உள்ளடக்கி இனி மடிக்கணினி வழங்கப்படும். அடுத்தகட்டமாக இரண்டாம் நிலை காவலா்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் காவலா்கள் கீழே பாயில்படுத்து உறங்கும் நிலை உள்ளது. அதற்கு மாற்றாக கட்டில்கள் வழங்கப்படும். நவீன காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை கற்பிக்க ஆன்லைன் வகுப்புகளும் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
அப்போது, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன், பயிற்சி கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.