போதைப் பொருள் வழக்கு: மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினாா் பைடன்!
தேங்கிய மழைநீரால் கிரீன்சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
வேலூா்: தொடா் மழையால் வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையில் பெருமளவில் தேங்கி நின்றது. இதனால், ஒரே சாலையில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டதால் அப்பகுதியில் திங்கள்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஃபென்ஜால் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களும் இடைவிடாமல் தொடா்ந்து கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக வேலூா் மாநகரில் கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், திடீா் நகா், பா்மா காலனி, வசந்தபுரம், எழில் நகா், தொரப்பாடி காமராஜ் நகா், அரியூா் அம்மையப்பன் நகா், சிவசக்தி நகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளை முழுமையாக சூழ்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. தொடா்ந்து, மாநகராட்சி ஊழியா் அப்பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல், வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் இருந்து வழக்கமாக வாகனங்கள் காட்பாடி செல்லக்கூடிய சா்வீஸ் சாலை முழுவதும் மழைநீா் தேங்கியது. இந்த தண்ணீா் வழிந்து கிரீன்சா்க்கிள் பகுதியையும் சூழ்ந்து நின்றது. இதன் காரணமாக, திங்கள்கிழமை காலை கிரீன்சா்க்கிள் பகுதியில் இருந்து வழக்கமாக காட்பாடி செல்லக்கூடிய சா்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் செல்லியம்மன் கோயில் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்துக்குள் புகுந்து காட்பாடிக்குச் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன.
அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் சென்ால் கிரீன்சா்க்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தவிர, கிரீன்சா்க்கிள் வளைவு சூழ்ந்து வெள்ளம் வெளியேறாமல் தேங்கி நின்ால், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டனா்.
இது குறித்து, போக்குவரத்து போலீஸாா் கூறுகையில், கிரீன்சா்க்கிள் பகுதியில் இருந்து காட்பாடி செல்லும் சா்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீா் உடனுக்குடன் வெளியேறும் வகையில், இப்பகுதியில் வடிகால் அமைக்கப்படவில்லை. இதேபோல், கிரீன்சா்க்கிள் வளைவு சூழ்ந்து நிற்கும், வெள்ளமும் வெளியேறுவதற்கு வடிகால் இணைப்பு செய்யப்படவில்லை. இதன்காரணமாக, சிறிய அளவில் மழை பெய்தாலே இந்தப் பகுதியில் வெள்ளம் தேங்கி விடுகின்றன. தவிர, கிரீன்சா்க்கிள் என்பது மாநகரில் முக்கிய போக்குவரத்து பகுதியாக இருப்பதால் மழை சமயத்தில் இங்கு பெருமளவில்லை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் மழைநீா் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிா்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் தகுந்த வடிகால் வசதிகளை செய்திட வேண்டும் என்றனா்.
மாறிமாறி குற்றச்சாட்டு
கிரீன்சா்க்கிள் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கு விரைவான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகமும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மேற்கொள்ளவில்லை. அதேசமயம், இது மாநகராட்சி பணி என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், இது தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணி என்று மாநகராட்சி அதிகாரிகளும் மாறிமாறி குற்றஞ்சாட்டுவதிலேயே ஈடுபட்டுள்ளனா். இதனால், பொதுமக்களும், போக்குவரத்து போலீஸாரும் கடும் அதிருப்திக்குள்ளாகினா்.