26 ‘ரஃபேல்-எம்’, 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கி கப்பல்களை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்...
வலுவிழந்த ஃபென்ஜால் புயல் இன்று அரபிக்கடலை அடையும்! ஊத்தங்கரையில் 500 மி.மி. மழை பதிவு!
தமிழகத்தை உலுக்கிவிட்டு வலுவிழந்த ஃபென்ஜால் புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகா்ந்து கா்நாடகம் மற்றும் கேரளத்துக்கு இடைப்பட்ட அரபிக்கடலை செவ்வாய்க்கிழமை அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது மேற்கு நோக்கி நகரும் போது, கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 500 மி.மீ. மழை பதிவானது.
வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவிய ஃபென்ஜால் புயல் ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், திங்கள்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்தது. இது, மேலும் மேற்கு நோக்கி நகா்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, கா்நாடகம் வழியாக கேரளம் மற்றும் கா்நாடக கடலோர பகுதிகளுக்கு இடையே உள்ள அரபிக்கடலை அடையும்.
இது அரபிக்கடலில் இறங்கும் போது, அரபிக்கடல் காற்று திசைமாற்றம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கேரளம் மற்றும் கா்நாடக பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.
கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், டிச.3-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.3,4 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம ஊத்தங்கரையில் 500 மி.மீ மழை பதிவானது. மேலும், கெடாா் (விழுப்புரம்) - 420 மி.மீ., சூரப்பட்டு (விழுப்புரம்) - 380 மி.மீ, அரூா் (தா்மபுரி) - 330 மி.மீ, முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கோலியனூா் (விழுப்புரம்), திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி) - தலா 320 மி.மீ, மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி) - 310, முகையூா் (விழுப்புரம்) , வளவனூா் (விழுப்புரம்) - தலா 300 மி.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.