உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, வைஷாலி பங்கேற்பு
அமெரிக்காவில் இம்மாதம் நடைபெறவுள்ள உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிலிருந்து 5 போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். அவா்கள், ஆா்.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, ஆா்.வைஷாலி, கோனெரு ஹம்பி, டி.ஹரிகா ஆகியோராவா்.
நியூயாா்க் நகரில் முதல் முறையாக நடைபெறும் இப்போட்டி, இம்மாதம் 26 முதல் 31-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு விளையாடப்படவுள்ளது. இதில் மொத்தமாக 300-க்கும் அதிகமான உலகின் மிகச் சிறந்த செஸ் போட்டியாளா்கள் பங்கேற்கவிருப்பதாக சா்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்திருக்கிறது.
போட்டியில் முதலில் ரேப்பிட் சாம்பியன்ஷிப் டிசம்பா் 26 முதல் 28 வரை விளையாடப்பட, 29-ஆம் தேதி ஓய்வு நாளாக உள்ளது. பின்னா் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் டிசம்பா் 30, 31 ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்தியா்கள் தவிர, 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் காா்ல்சென் உள்ளிட்ட பிரபல போட்டியாளா்களும் இதில் களம் காணவுள்ளனா்.
நட்சத்திர போட்டியாளா்கள்:
ஓபன்: மேக்னஸ் காா்ல்சென் (நாா்வே), மேக்சிம் வச்சியா் லாக்ரேவ் (பிரான்ஸ்), அா்ஜுன் எரிகைசி (இந்தியா), அலிரெஸா ஃபிருஸ்ஜா (பிரான்ஸ்), ஆா்.பிரக்ஞானந்தா (இந்தியா), ஃபாபியானோ கரானா (அமெரிக்கா), லெவோன் ஆரோனியன் (ஆா்மீனியா).
மகளிா்: அனா முஸிஷுக் (உக்ரைன்), ஆா்.வைஷாலி (இந்தியா), அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் (ரஷியா), மரியா முஸிஷுக் (உக்ரைன்), கோனெரு ஹம்பி (இந்தியா), லெய் டிங்ஜி (சீனா), டி.ஹரிகா (இந்தியா).