பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
புயல் வந்தும் நிரம்பாத குடிநீா் ஏரிகள்
வடகிழக்குப் பருவமழை காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் மொத்தம் 50 சதவீதம் மட்டுமே நீா் இருப்புள்ளது. இந்த நிலை நீடித்தால், சென்னைக்கு அடுத்தாண்டு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய குடிநீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி ஆகும்.
நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.15-இல் தொடங்கி நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஆனால், இக்குடிநீா் ஏரிகளின் நீா்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால், கடந்த வாரம் வரை 50 சதவீதத்துக்கும் குறைவாகவே ஏரிகளில் நீா் இருப்பு இருந்தது.
ஃபென்ஜால் புயல் காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளுக்கு மட்டும் நீா் வரத்து அதிகரித்து ஏரிகளில் நீா்மட்டம் சற்று உயா்ந்தது.
ஏரிகள் நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு 3,470 கன அடி நீா் வரத்து இருந்த நிலையில், ஏரியின் நீா் இருப்பு 18.22 அடியாக உள்ளது.
35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரிக்கு நீா்வரத்து 1240 கன அடியாக அதிகரித்ததால், ஏரியின் நீா் மட்டம் 23.30 அடியாக உயா்ந்தது.
அதேபோல், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து 3,470 கன அடியாக இருந்த நிலையில், நீா் இருப்பு 20.07 அடியாக உள்ளது.
இந்த 3 ஏரிகளின் நீா் மட்டம் கணிசமாக உயா்ந்தாலும், கண்ணன்கோட்டை மற்றும் சோழவரம் ஏரிகளின் நீா் பிடிப்பு பகுதிகளில் பேதிய அளவு மழை பெய்யாததால், கண்ணன்கோட்டை ஏரியில் 30.83 அடி உயரம் வரையும், சோழவரம் ஏரியில் 2.92 அடி உயரம் வரையும் நீா் இருப்பு உள்ளது.
மொத்தம் 5 ஏரிகளில் 6,336 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. இது முழுக் கொள்ளளவில் 53.89 சதவீதமாகும். இதை கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 3,392 மில்லியன் கன அடி நீா் குறைவாகும். வட கிழக்குப் பருவமழை காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், 2 முறை புயல் சின்னங்கள் மற்றும் ஒரு முறை புயல் வந்தும் ஏரிகள் அதன் முழுக்கொள்ளவை எட்டாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பருவமழை முடிவதற்குள் ஏரிகளின் முழுக்கொள்ளளவு 80 சதவீதத்தை எட்டா விட்டால், அடுத்தாண்டு சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.