Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்... எல்லோருக்கும் ஏற்றதா?
திருவண்ணாமலையை திணறடித்த `ஃபெஞ்சல்’ புயல் - குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் கடும் பாதிப்பு
`ஃபெஞ்சல்’ புயல், திருவண்ணாமலை மாவட்டத்தையே திணறடித்திருக்கிறது.
பே கோபுரத் தெரு, சின்னக்கடை தெரு, போளூர் சாலை, வேலூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். ஊசாம்பாடி ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, உபரிநீர் அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் திருவண்ணாமலை - போளூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. வாகனங்கள் நகர முடியாமல் சாலையை மூழ்கடித்த தண்ணீரிலேயே சிக்கிக்கொண்டன.
இதேபோல், திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தையும் மழைநீர் சூழ்ந்தது. வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீரால் ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஆட்சியர் குடியிருப்பும் வெள்ள நீரால் சூழப்பட்டது.
சமுத்திரம் அருகேயுள்ள சொர்ணபூமி நகரையும் மழைநீர் சூழ்ந்ததால், குடியிருப்புகளில் இருந்த மின்சாதனப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்திருக்கின்றன. தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நொச்சிமலைப் பகுதியும் வெள்ளநீரால் சூழப்பட்டதால், அங்குள்ள வீடுகளில் சிக்கித் தவித்த 13 பேரைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். விவசாய நிலங்களையும் மழை நீர் மூழ்கடித்துள்ளது. மழைநீர் வடியப் பல நாள்களாகும் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்திருக்கிறார்கள்.
இதேபோல், சந்தவாசல், படைவீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்திருக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
திருவண்ணாமலை அருகில் உள்ள பள்ளியம்பட்டு கிராமத்தில் திடீரென பயங்கர இடி சத்தத்துடன் தாக்கிய மின்னலால் அங்குள்ள சாலையே சிதைந்து பிளவுப்பட்டிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் இருக்கின்றனர்.
சாத்தனூர் அணையும் முழுக் கொள்ளளவை எட்டியிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு `அபாய’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆரணியில் உள்ள பையூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாலும், ஏரிக்கு அருகேயுள்ள கே.கே.நகர் குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. பாம்புகள், விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகுவதாகவும், ஏரிக்கரையை விரைவாக பலப்படுத்தக் கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அதி தீவிர மழை பெய்து வருவதால் டிசம்பர் 2-ம் தேதியான இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.