கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!
SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 4,463 பட்டங்கள் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி.கே. கணேஷ் மற்றும் துணைத் தலைவர் பிரீத்தா கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே சூர்யாவுக்கும், இந்திய பேட்மிட்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் மற்றும் நேச்சுரல்ஸ் சலூனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை இயக்குநரான சி.கே குமாரவேலுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை அவர்களுக்கு வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "வேல்ஸ் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வடிவமைப்பதில் டாக்டர் கணேஷின் பங்கு மிகப்பெரியது. பல்கலைக்கழகத்தில் பல சிறப்பு மையங்களை உருவாக்க வழிவகுத்த அவரது சிந்தனை மற்றும் அணுகுமுறைகளைக் கண்டு வியக்கிறேன். இன்று எனக்கு முன்னால் தன்னம்பிக்கையுடன் அமர்ந்துள்ள பட்டதாரிகளைப் பார்க்கும்போது, நான் மாணவர்களை மட்டுமல்ல, எதிர்காலத் தலைவர்களையும் பார்க்கிறேன்.
நீங்கள் ‘விக்சித் பாரத்தின்’ (வளர்ச்சியடைந்த இந்தியாவின்) தூண்கள், மேலும் நமது தேசத்தை 21-ம் நூற்றாண்டிற்கு வழிநடத்தும் பொறுப்பு இப்போது உங்கள் மீது உள்ளது." என்றார்.
இதனையடுத்து டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே சூர்யா பேசுகையில், " நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா? என்று கேட்டால் அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் என் உழைப்புக்கு உண்மையாக இருப்பேன்.
அது என்னிடம் உள்ள ஒரு நல்ல குணம். அதை நான் 100% பெருமிதமாக சொல்லிக் கொள்வேன். இந்த பட்டம் என்னுடைய உழைப்புக்கும், உண்மைக்கும் கிடைத்த பரிசு. இதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள `கேம் சேஞ்சர்' திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. அதே ஜனவரி மாதம் அஜித் நடித்துள்ள `விடாமுயற்சி' படமும் வெளியாக உள்ளது. இது பற்றி அவர், " கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி சில மாதங்களுக்கு முன்பே அறிவிச்சுட்டாங்க. ஆனால் `விடாமுயற்சி' படத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை இப்போதுதான் எழுந்திருக்கு. அஜித் சார் படம் என்றாலே ஓப்பனிங் வேற லெவல்ல இருக்கும்.
அந்த படத்துக்கு போனவங்க போக மீதி இருக்கவங்க இந்த படத்துக்கு வரட்டும். விடாமுயற்சியின் டீசர் பார்தேன் நல்லா இருந்தது. `கேம் சேஞ்சர்' படம் நன்றாக வரும். அந்தப் படத்தோட வெற்றி கண்டிப்பா இந்தியன் 3-ஐ மாபெரும் வெற்றி அடைய செய்யும். ஷங்கர் சார் மிகப்பெரிய உழைப்பாளி. அவர் போன்ற மனிதர்கள் இருப்பது இந்திய சினிமாவிற்கு பெருமை. உண்மையில் ரியல் கேம் சேஞ்சர் சங்கர் சார் தான். கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகிய ஒரு வாரத்திற்குள் எனது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகும்" என்றார்.