`முல்லைப்பெரியாறு நீர் பிடிப்பு பகுதியில் கார் பார்க்கிங்; அலட்சிய தமிழக அரசு'- விவசாயிகள் போராட்டம்
கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு எல்லைக்குள் வரும் ஆனவச்சால் பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அத்துமீறி கட்டப்படும் கார் பார்க்கிங் திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தினர் தேனி லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம், ''தென்தமிழக மக்களின் நீராதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணை நீர் தேக்கப்பகுதி மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் கொண்டது. அணை உள்ளிட்ட இந்த பகுதிகள் அனைத்தும் 999 ஆண்டுக்கால குத்தகை உரிமையின் படி தமிழக கட்டுபாட்டில் இருக்கக்கூடியது. ஆனால் நீர்பிடிப்பு பகுதிக்குள் வரும் தேக்கடியில் படகுதுறையை தொடங்கி ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது கேரள அரசு. ஆனால் அதில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றுவருவதற்கான படகைக்கூட இயக்கவிடாமல் தடுக்கின்றனர். அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டது தமிழக அரசு. இந்த விவகாரம் உள்பட அணை தொடர்பான உரிமைகளை ஒவ்வொன்றாக தமிழக அரசு இழந்து வருகிறது.
கடந்த 2013-ல் தேக்கடி படகுதுறை சுற்றுலா பகுதியை மேம்படுத்த அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க கேரள அரசு திட்டமிட்டது. இதனால் குமுளி பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதால் அங்குள்ள வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குமுளியைச் சேர்ந்த தாமஸ் ஆபிரகாம் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு அதில் தமிழக அரசு இணைந்து கொண்டது. அந்த வழக்கில் நீர்தேக்க பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது.
தொடக்கத்தில் வனவிலங்குகள் நன்மைக்காக, சுற்றுச்சூழலுக்காக என முறையீடு செய்து கார் பார்க்கிங் அமைக்க அனுமதி கோரினர். தரைப்பகுதியை மட்டுமே பயன்படுத்தி கொள்கிறோம் எனக் கேட்டனர். அப்போது தமிழக அரசு சார்பிலும் எவ்வித எதிர்ப்பும் இல்லை என்பதால், பசுமை தீர்ப்பாயம் 2017-ல் தரைப்பகுதியை பார்க்கிங்காக பயன்படுத்த அனுமதி அளித்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்ததால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாமல் இருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வே ஆஃப் இந்தியா மூலம் நில அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் கேரள, தமிழக அதிகாரிகள் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. கேரள அரசு உடனடியாக 3 சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. பல முக்கிய நில அளவீடு பணியில் ஈடுபட்ட நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் நம்மிடம் இருந்தும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்காமல் அலட்சியமாக இருந்தது தமிழக அரசு. இதனால் ஆனவச்சால் பகுதி கேரள வனத்துறைக்குள் வருவதாகக் கூறி அவர்களுக்கு ஆதரவான ஒருதலை பட்சமான தீர்ப்பை பெற்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து தான் கேரள அரசு ஆனவச்சால் கார் பார்க்கிங் பணியை தொடங்கியுள்ளது.
1886-ல் அணைக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது தயாரிக்கப்பட்ட வரைபடம் இருமாநில அரசுகளிடமும் உள்ளது. அந்த வரைபடத்தின் அடிப்படையில் அளவீடு பணிகள் நடந்திருந்தால், சர்வே ஆஃப் இந்தியா சரியான அறிக்கையை அளித்திருக்கும். ஒருதலை பட்சமான தீர்ப்பு கிடைத்திருக்காது. ஆனவச்சால் பகுதியை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.