திருவண்ணாமலை: மண்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்; மீட்புப் பணிகளில் சிக்கல் - ...
America: கைகொடுத்த நம்பிக்கை... பரிந்துரைத்த ட்ரம்ப்; FBI இயக்குநராக காஷ் படேல் `டிக்' ஆனது எப்படி?!
கடந்த மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அதில் ஒன்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இயக்குநராக, தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் படேலை நியமித்திருக்கிறார்.
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர் காஷ் படேல். நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கி, நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். இவரைத்தான் FBI இயக்குநராக நியமிக்க டொனால்ட் ட்ரம்பால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பூர்வீகமும் - படிப்பும்!
இயற்பெயர் காஷ்யப் பிரமோத் படேல். நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் குஜராத்தி தம்பதிக்கு பிறந்தார். இந்தியாவுடன் நீண்ட தொடர்பில் இருக்கும் அவர், ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நீதித்துறையில் இளங்கலைப் பட்டமும், பேஸ் பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்று பட்டம் பெற்றார். மேலும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில், சர்வதேச சட்டச் சான்றிதழையும் பெற்றிருக்கிறார். 2014-ல் நீதித்துறையில் ஒரு விசாரணை வழக்கறிஞராக பணியில் சேர்ந்த இவர், சில சிறப்பு செயல்பாட்டுக் குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்பின் நம்பிக்கை!
டொனால்ட் ட்ரம்பின் முதல் பதவி காலத்தில், தேசிய உளவுத்துறை இயக்குநர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகிய இருவருக்கும் காஷ் படேல் ஆலோசனையாளராக செயலாற்றியிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் அதிபர் தேர்தல் பிரசாரத்தில், ரஷ்ய தலையீடு இருப்பதாக எஃப்.பி.ஐ நடத்திய விசாரணக்குப் பிறகு குறிப்பிட்டது. இந்த விசாரணையில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் காஷ் படேல். அதன் மூலமே டொனால்ட் ட்ரம்ப்பின் நம்பிக்கையைப் பெற்றதாக கூறப்படுகிறது. தி நியூயார்க் டைம்ஸ், ``2018-ல் காஷ் படேல், ஹவுஸ் இன்டலிஜென்ஸ் கமிட்டியின் தலைவர் டெவின் நூன்ஸின் உதவியாளராக பணியாற்றினார். அந்த விசாரணை மையத்தின் ரகசிய "நூன்ஸ் மெமோ" வின் முதன்மை ஆசிரியராக காஷ் படேலே செயல்பட்டார்." எனத் தெரிவித்திருக்கிறது.
ஆதரவும் - சாட்சியும்!
டொனால்ட் ட்ரம்ப் தனது இல்லத்தில் முக்கியமான அரசு ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆவணங்களை சட்டத்துறை திரும்பப் பெற முயன்றது. இது தொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வாஷிங்டன் கிராண்ட் ஜூரி முன்பு, 2022-ல் ட்ரம்பிற்கு ஆதரவாக காஷ் படேல் சாட்சியளித்தார். அதேபோல 2020 அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற டொனால்ட் ட்ரம்ப் முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு, அதைத் தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான விசாரணை கொலராடோ நீதிமன்றத்தில் நடந்தது. அப்போதும் ட்ரம்ப்புக்கு ஆதரவாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரின் தலைமை அதிகாரியாக இருந்த காஷ் படேல் சாட்சியளித்தார். இருப்பினும், இந்த சாட்சியை "நம்பகமான சாட்சி அல்ல" என்று நீதிமன்றம் அறிவித்தது.
அதிரடி மாற்றத்துக்கு தயார்!
காஷ் படேல் FBI இயக்குநராக நியமிக்கப்பட்டால், FBIயை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அதுகுறித்து காஷ் படேல் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார். "Shawn Ryan Show" எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஷ் படேல், ``FBI-யின் தடம் மிகவும் பெரியதாகிவிட்டது. எந்தளவு என்றால், ஃப்ளோரிடாவில் உள்ள ட்ரம்பின் மார்-ஏ-லாகோ இல்லத்தில் FBI, 2022-ல் தேடுதல் வாரண்டையே பிறப்பித்தது." என ட்ரம்ப் மீதான விசாரணையை விமர்சித்திருந்தார். மேலும், `நான் FBI-யில் பணிபுரியும் ஏழாயிரம் ஊழியர்களையும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமெரிக்கா முழுவதும் அனுப்புவேன்' எனவும் குறிப்பிட்டார்.
காஷ் படேல் எழுதிய புத்தகமான 'Government Gangsters' புத்தகத்தில், FBI தலைமையகத்தை வாஷிங்டனிலிருந்து இடமாற்றத்தையும், FBI க்குள் உள்ள பொது ஆலோசகர் அலுவலகத்தை குறைப்பதையும் 'உறுதியாக அரசை தோற்கடிப்பதற்கான சிறந்த சீர்திருத்தங்கள்' எனக் குறிப்பிடுகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...