திருவண்ணாமலை: மண்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்; மீட்புப் பணிகளில் சிக்கல் - அமைச்சர் கூறியதென்ன?
திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில் மண் சரிவின் காரணமாக இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏழு பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மீட்புப் பணிகளைஅமைச்சர் எ.வ வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அமைச்சருக்கு எடுத்துரைத்தார். முன்னதாக வ.உ.சி நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து அமைச்சர் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் எ.வ வேலு,"மூன்று தினங்களாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதியைச் சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணி நடந்து வருகிறது.
இடிபாடுகளில் ஏழு பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். மண் மற்றும் கல்லின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் பிற்பகல் ஐஐடி வல்லுநர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்யவிருக்கின்றனர். மீட்புப் பணி மேற்கொள்ளும் இடத்திற்கு அருகே ராட்சதப் பாறை உள்ளதால் பணி கவனமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இடர்பாடுகளால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் நிலவுகிறது,"என்றார்.
மீட்புப் பணிக்குப் போதுமான மீட்புப் பணி வீரர்கள் உள்ளனரா என எமது செய்தியாளர் கேட்டதற்கு,"மீட்புப் பணிக்குப் போதுமான அளவில் வீரர்கள் உள்ளார்கள். இயந்திரங்கள் மூலம் பணி மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. கற்கள் மற்றும் மண்ணை மீட்புப் பணி வீரர்களால் அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது," என்றார்.