விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்
கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நிலவரம் என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நான்கு ரோடு சாலை கடை காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் போன்றவற்றில் மழை நீர் சூழ்ந்தது. இந்த மழை நீரால் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
அதேபோன்று ஊத்தங்கரையில் ஒரே நாளில் 500 மி. மீட்டர் பெய்த வரலாறு காணாத மழையால் பேருந்து நிலையம் அருகே உள்ள பரவன் ஏரி நிரம்பி, வெள்ளப்பெருக்கில் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள், கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் பரவன் ஏரி அருகே உள்ள உப்பாரப்பட்டி, சிங்காரப்பேட்டை, அனுமன் தீர்த்தம், வெங்கடத்தான்பட்டி போன்ற கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேறி ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதிய உணவு வசதி இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோரை பொறுப்பு அமைச்சராக அறிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட இடத்தை அமைச்சர்கள் யாரும் பார்வையிட வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழை அருகே இருக்கின்ற விவசாய நிலங்களைப் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பல இடங்களில் மின் கம்பங்கள் போன்றவை பழுதடைந்து காணப்படுகின்றன. அத்தியாவசிய தேவைக்குப் பொதுமக்கள் அனைவரும் திண்டாடி வருகின்றனர். மாவட்ட நிர்வாக மீட்புக் குழுவினரும் பாதிப்புகள் அதிகமாகியுள்ள இடங்களில் மாட்டிக் கொண்டுள்ள பொதுமக்களை மீட்டு எடுப்பதில் சிரமப்பட்டு வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...