Rain Update: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு ரெட் அலார்ட்; சுற்றுலா பயணிகளே உஷார்
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்தக் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நிலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன மழை பொழிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகனமழை அல்லது கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒகேனக்கல், சிறுவாணி மற்றும் இதனையொட்டியுள்ள பகுதிகளிலும் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் நிலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
இதன் காரணமாக டிசம்பர் 2,3 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.