எந்தெந்த பகுதிகளில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த...' - யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி
பிரதமர் மோடியின் கேபினெட்டில் மத்திய நெடுஞ்சாலைத் துறையைக் கவனித்துவரும் நிதின் கட்கரி, `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல்' என்று அரசியல் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார்.
நாக்பூரில் '50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப் (50 Golden Rules of Life)' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ``ஒருவர் குடும்பம், சமூகம், அரசியல் அல்லது கார்ப்பரேட் லைஃப் என எதில் இருந்தாலும், வாழ்வின் சவால்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொண்டு வாழும் கலையை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கு, அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல். இதில், தொண்டராக வருபவர் எம்.எல்.ஏ ஆக முடியவில்லையே என வருத்தப்படுகிறார். அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என எம்.எல்.ஏ சோகத்தில் இருக்கிறார். அமைச்சராக இருப்பவர் நல்ல துறை கிடைக்கவில்லை, முதலமைச்சராக முடியவில்லை எனத் தவிக்கிறார். முதலமைச்சரோ மேலிடம் எப்போது பதவியைப் பறிக்கும் என்று தெரியாமல் டென்ஷனில் இருக்கிறார். எனவே, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், அது எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதே `வாழும் கலை' (Art of Living). அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்." என்று கூறினார்.
நிதின் கட்கரி இதைப் பொதுவாகக் கூறினாலும், அரசியலில் அவர் யாரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் என்ற விவாதம் வெடித்திருக்கிறது. ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் இருக்கும் நாக்பூர் தொகுதியில் 2014 முதல் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக எம்.பி-யாக வெற்றிபெற்ற பா.ஜ.க மூத்த தலைவர் நிதின் கட்கரி, தனக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அது மோடி வசம் சென்றதாக அவ்வப்போது பேச்சுகள் எழுவது உண்டு.
அந்தப் பேச்சுக்களை அவ்வப்போது உறுதிப்படுத்தும் வகையில் சில நிகழ்வுகளும் அரங்கேறின. அதில் ஒன்று, தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மோடி வரும்போது கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என அனைவரும் எழுந்து நிற்க, முன்வரிசையில் அமர்ந்திருந்த நிதின் கட்கரி மட்டும் எழாமல் அப்படியே இருந்தார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அப்போது வீடியோவாக வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் பேச்சுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது என்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...