Rain Alert: 'இன்று இரவு முதல் கனமழை' - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானி...
மகாராஷ்டிரா: 'உள்துறை தான் வேண்டும்' - அடம் பிடிக்கும் ஷிண்டே, அசராத பாஜக
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அறுதிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் பதவியை பா.ஜ.க-விற்கு விட்டுக்கொடுத்துள்ள ஏக்நாத் ஷிண்டே, எப்படியும் தனக்கு உள்துறை இலாகா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். தனக்கு துணை முதல்வர் பதவியுடன் கூடிய உள்துறை அமைச்சகம் கொடுத்தால் மட்டுமே ஆட்சியில் பங்கேற்பேன் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் பா.ஜ.க உள்துறை அமைச்சகத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் அதிகார பகிர்வு பேச்சுவார்த்தையை பாதியில் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்ற ஏக்நாத் ஷிண்டே நேற்று இரவு மும்பை திரும்பினார். அவர் மும்பை திரும்பினாலும் தனது முடிவில் உறுதியாகவே இருக்கிறார்.
இதனால் ஏக்நாத் ஷிண்டே வந்தாலும், வராவிட்டாலும் சரி என்ற முடிவில் புதிய அரசு 5ம் தேதி பதவியேற்கும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே ஏன் இந்த அளவுக்கு உள்துறை அமைச்சகத்திற்கு ஆசைப்படுகிறார் என்பது குறித்து விசாரித்த போது பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளி வந்தது.
அதில் ஏக்நாத் ஷிண்டே 2019ம் ஆண்டு மகாவிகாஷ் அகாடி அரசு பதவியேற்ற போதே உள்துறை அமைச்சகம் தனக்கு வேண்டும் என்று கேட்டார். ஆனால் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே அப்பதவியை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். மகாராஷ்டிராவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் உள்துறை அமைச்சராக இருக்கவேண்டும் என்பது ஏக்நாத் ஷிண்டேயின் கனவாக இருந்து வருகிறது.
எனவேதான் இப்பதவிக்காக பிடிவாதமாக இருக்கிறார். 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக்கொண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்த போதும் தனக்கு உள்துறை அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டுப்பார்த்தார். ஆனால் பெரியண்ணாவாக இருந்த பா.ஜ.க ஏற்கனவே உங்களுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி அப்பதவியை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வசம் வைத்துக்கொண்டது. இதனால் இரண்டாவது முறையாக அப்பதவி கிடைக்காமல் போய்விட்டது.
இப்போது மீண்டும் அதற்கான ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. நான் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கிறேன், அதற்கு பதில் நீங்கள் எனக்கு உள்துறை அமைச்சர் பதவியை கொடுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க இந்த முறையும் அத்துறையை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறி வருகிறது. ஏற்கனவே மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன் ரேஷ்மி சுக்லா டி.ஜி.பியாக இருக்கிறார்.
எனவே ஏக்நாத் ஷிண்டேயிக்கு அப்பதவியை கொடுப்பதில் பா.ஜ.கவிற்கு விருப்பம் இல்லை. இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ''உள்துறை அமைச்சகம் கிடைத்தால் உத்தவ் தாக்கரே கட்சியில் இருக்கும் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து தங்களது கட்சிக்கு கொண்டு வர முடியும் என்று ஏக்நாத் ஷிண்டே நினைக்கிறார்''என்றார். முதல்வர் பதவிக்கு அடுத்து முக்கிய பதவியாக உள்துறை அமைச்சகம் இருக்கிறது. ஏற்கனவே தான் இருகட்சிகளும் உள்துறை அமைச்சகத்திற்கு குறி வைத்துள்ளன. உள்துறை அமைச்சகம் மட்டுமல்லாது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை போன்ற இலாகாவுக்கும் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இன்று இரவு அல்லது நாளை மூன்று கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சொந்த ஊருக்கு சென்ற போது உடல் நலம் பாதிக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே மும்பை திரும்பிய பிறகு தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். அதோடு தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலையில் ஏக்நாத் ஷிண்டேயை போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். ஏக்நாத் ஷிண்டே மகன் பெயர் துணை முதல்வர் பதவிக்கு அடிபடுவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை மறுத்துள்ள ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், துணை முதல்வர் பதவிக்கு எனது பெயர் அடிபடுவதாக வெளியாகி இருக்கும் செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை. மக்களவை தேர்தலுக்கு பிறகு எனக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கட்சியை வலுப்படுத்துவதற்காக அப்பதவியை நிராகரித்துவிட்டேன். எந்தவித அதிகாரத்திற்கும் நான் விருப்பப்படவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.