வேலூர்: ஜல்லி கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்; எப்போதும் சீரமைக்கப்படும் தொரப்பாடி சாலை?
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையாக தொரப்பாடி சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தில் இருந்து முக்கிய சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. ஆனால் இந்த சாலையின் நடுவே மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளால் தொரப்பாடி சாலை ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு விபத்து ஏற்படுத்தும் அபாயகரமான சாலையாக மாறியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான அமிர்தி வன உயிரியல் பூங்கா மற்றும் ஶ்ரீபுரம் தங்க கோயில் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக வேலூர் தொரப்பாடி சாலை உள்ளது. இந்த சாலை வேலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, முதுரங்கம் அரசு கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களை இணைப்பதால் காலை மற்றும் மாலை நேரத்தில் எப்போதும் இந்த சாலை மிகவும் பரபரப்பாக இருக்கும். மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இணைக்கும் சாலையாகவும் தொரப்பாடி சாலை உள்ளது.
ஒரு நிமிடத்தில் சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு பகுதியான பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தொரப்பாடி சாலையில் எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து அரியூர் மேம்பாலம் வரை சுமார் 1 கிமீ தூரத்திற்கு சாலையின் நடுவே தோண்டப்பட்டு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று, அந்த பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன. அதன் பிறகு சாலையின் நடுவில் ஜல்லி கற்கள் கொண்டு நிரப்பப்பட்டன. அரியூர் மேம்பாலம் பகுதியில் இருந்து தொரப்பாடி பகுதி வரை உள்ள சாலையின் ஒரு புறம் முழுவதும் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்த தொரப்பாடி சாலை எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையின் உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டபோது, ``பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்து தற்பொழுது தான் மாநகராட்சி தொரப்பாடி சாலையை எங்களுக்கு ஒப்படைத்துள்ளனர். தார் சாலை அமைப்பதற்காக தற்பொழுது தான் ஜல்லி கற்களை சமப்படுத்தி வருகிறோம். மேலும் அந்த சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்ட இடத்தில் சுத்தப்படுத்தி வருகிறோம். தார் சாலை அமைக்க முற்படும் பொழுது கனமழை முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனவே கனமழை எச்சரிக்கை முடிந்தவுடன் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்கிறோம்” என்று கூறினார்.