UGC: 'ஓராண்டுக்கு முன்பே படிப்பை முடிக்கலாம்' - யுஜிசியின் புதிய நடைமுறை சொல்வது...
வேலூர்: திறப்பு விழா நடத்தியும் திறக்கப்படாத கல்லூரி மாணவிகள் விடுதி! - அதிகாரிகள் சொல்வதென்ன?
வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி பகுதியில் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் அரசு இளங்கலை கல்லூரி மாணவிகளுக்கான தங்கும் விடுதி கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வரால் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைக்கப்பட்டது. திறப்பு விழா கண்டு மூன்று மாதங்கள் ஆகியும் இந்த கட்டடம் இன்னும் மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இந்த புதிய விடுதி கட்டடம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்கும் இளங்கலை மாணவிகளுக்கு தொரப்பாடி பகுதியில், தாட்கோ நிறுவனத்தின் சார்பில் பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய கட்டடம் கட்டும் வரையில் மாணவிகள் தற்காலிகமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பென்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விடுதி கட்டடம் பணிகள் முடிவடைந்து தமிழக முதல்வரால் கடந்த ஆகஸ்ட் மாதம் காணொளிக் காட்சி மூலம் திறக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா கண்டு மூன்று மாதங்கள் ஆகியும் அந்த புதிய விடுதி கட்டடம் மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த விடுதி கட்டடம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து வேலூர் தாட்கோ செயற்பொறியாளரிடம் கேட்டபொழுது, “புதிதாக கட்டப்பட்ட மாணவிகளுக்கான விடுதி கட்டடத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. மாணவிகளின் நலன் கருதி அறையின் ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தரும்படி கேட்டு இருந்தனர். அந்த பணிகளை நிறைவேற்றி உள்ளோம்.
கழிப்பறைக்கு கதவு பொருத்தும் பணி நிலுவையில் இருந்தது. அந்த பணியும் தற்போது நிறைவடைந்துள்ளது. எல்லா பணிகளும் முடிவுற்ற நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையுடன் இணைந்து இந்த விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகளை எடுத்து வருகிறோம்.” என்று தெரிவித்தார்.
எல்லா பணிகளும் முடிந்துள்ள நிலையில் கூடிய விரைவில் புதிய விடுதி கட்டடம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவிகளின் எதிர்பார்பாக உள்ளது.