Rain Alert: 'இன்று இரவு முதல் கனமழை' - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானி...
டிரம்பின் எச்சரிக்கையும்... டாலர் வர்த்தகத்தின் பின்னணியும்!
அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தின் மூலம் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகள் முயற்சித்தால் அந்த நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தோ்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 9 நாடுகள் உறுப்பினராக உள்ளன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் இந்தக் குழுவில் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளன. மேலும் பல நாடுகளும் உறுப்பினராக இணையவுள்ளன.
இந்த நிலையில் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலகளாவிய வர்த்தகத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகளவில் அதிகம் பயன்படுத்தும் நாணயமாக அமெரிக்காவின் டாலர் இருக்கின்றது. அதற்கு முன்னர் பிரிட்டனின் நாணயமான பவுண்ட் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அந்நிய செலாவணிக்கும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான கையிருப்பிற்கும் அமெரிக்க டாலரை பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இதையும் படிக்க | எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமனம்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்
அந்நியச் செலாவணி கையிருப்பு
ரிசர்வ் கரன்சி எனப்படும் கையிருப்பு பணம் மத்திய வங்கிகள் அந்நியச் செலாவணிக்கு இருப்பு வைத்துள்ள வெளிநாட்டு நாணயமாகும். பெரும்பாலான நாடுகள் தங்கள் இருப்புக்களில் பெரிய மற்றும் திறந்த நிதிச் சந்தைகளைக் கொண்ட நாணயத்தை வைத்திருக்க விரும்புகின்றன. ஏனென்றால் அவர்கள் தேவைப்படும்போது தங்களின் வர்த்தகத்திற்கு அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதனாலேயே பல நாடுகள் தங்களின் வர்த்தகத்திற்கு டாலரைப் பயன்படுத்துகின்றனர். மேலும், எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களும் டாலர் மூலமே வர்த்தகம் செய்யப்படுகின்றது. சவுதி அரேபியா உள்பட பொருளாதாரத்தில் மேம்பட்ட சில முக்கிய நாடுகளும் டாலரிலேயே வர்த்தகம் செய்கின்றனர்.
மத்திய வங்கிகள் பெரும்பாலும் அமெரிக்க கருவூலங்களின் அரசுக் கடன் பத்திரங்கள் வடிவில் நாணயத்தை இருப்பு வைத்திருக்கின்றன. அமெரிக்க கருவூலச் சந்தையானது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் சந்தையாகும்.
அமெரிக்க டாலருக்கு அதிக தேவை இருப்பதால் அமெரிக்கா குறைந்த அளவிலேயே கடன் வாங்குகிறது. ஏனெனில் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிப்பதால், அவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியதில்லை. மேலும் இதனால் வெளிநாட்டு கடன் செலவு பெருமளவில் குறைகின்றது.
இதையும் படிக்க | ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு
டாலரை ஆயுதமாக்கும் அமெரிக்கா
டாலரை மையப்படுத்திய சர்வதேச வர்த்தகம் அமெரிக்க நிதித் துறையின் அதிகாரத்தை உயர்த்துகிறது. அமெரிக்காவின் ஃபெடெரல் ரிசர்வ் மத்திய வங்கியுடன் மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், மற்ற நாடுகளுக்கிடையிலான வர்த்தகங்கள் உள்பட, டாலரில் செய்யப்படும் அனைத்து வர்த்தகமும் அமெரிக்காவைச் சார்ந்தே இருக்கின்றன.
டாலரில் பரிவர்த்தனை செய்வதைத் தடுப்பதன் மூலம், அமெரிக்கா தடை செய்யும் நாடுகளுக்கு வணிகம் செய்வதை கடினமாக்கும். எடுத்துக்காட்டாக, 2022 இல் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷியாவை டாலர் பரிவர்த்தனையில் இருந்து அமெரிக்க துண்டித்தது. இதனால், ரஷிய மத்திய வங்கியின் சொத்துக்களில் 300 பில்லியன் டாலர் முடங்கியது. இது நாட்டின் கடனை அதிகப்படுத்தியது.
இதுகுறித்து கடந்த அக்டோபர் பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷிய அதிபர் புதின், “அமெரிக்க டாலரை ஆயுதமாக்கியது பெரிய தவறு. ரஷியாவின் வர்த்தகத்தை அமெரிக்கா தடை செய்தால் வேறு நாணயத்துக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | உக்ரைனிலிருந்து வெளியேறாவிட்டாலும் ரஷியாவுடன் ஒப்பந்தம்
டாலர் மதிப்பிழப்பு நடவடிக்கை
சர்வதேச வர்த்தகத்தில் டாலர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினாலும், அதன் பங்கை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது என பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக பல நாடுகள் டாலர் பயன்பாட்டைக் குறைக்க (டி- டாலரைஸ்) முடியும். கடந்த ஏப்ரல் 2023 பிரிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய பிரேசில் பிரதமர், “நாம் ஏன் நமது சொந்த நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ளக்கூடாது?” என்றார்.
ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்குப் பிறகு இந்தியா டாலரைப் பயன்படுத்தாமல் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது. சீனாவும் அதையே செய்கிறது. ஆனால், வலுவான மத்திய வங்கிகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் இல்லாத பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கட்டமைப்பு சவால்கள் காரணமாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் முயற்சி அடுத்தக்கட்டத்திற்கு செல்லவில்லை.
கடந்த 2016ல் இருந்து உலக கையிருப்பில் சீன நாணயம் ரென்மின்பியின் பங்கு மூன்று மடங்கு (1% முதல் 3% வரை) உயர்ந்துள்ளது. டிரம்பின் கொந்தளிப்புக்கு இதுகூட முதன்மை காரணமாக இருக்கலாம்.
இதையும் படிக்க | டாலரை விட்டு வெளியேறினால்... பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
டாலர் வர்த்தகமும் அதற்கான விலையும்
டாலரின் அதிக மதிப்புக்கு அமெரிக்காவும் விலை கொடுத்து வருகின்றது. டாலரின் மதிப்பின் மூலம் அமெரிக்காவிற்கான இறக்குமதிகள் மலிவாகும் அதே வேளையில், அமெரிக்காவின் ஏற்றுமதிக்கான விலையை இது உயர்ந்ததாக ஆக்குகிறது.
இதன் மூலம் வெளிநாடுகளில் பொருட்களை விற்பனை செய்யும் அதன் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, வேலை இழப்புகள் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு பெரிய வர்த்தக உபரியை பராமரிக்க ஒரு நாடு தனது நாணயத்தின் மதிப்பைக் குறைத்து வைத்திருக்கும் போது நாணயங்களைக் கையாள்வதில் அமெரிக்காவும் பாதிக்கப்படுகிறது.
ஒரு நாடு டாலர் கையிருப்பைக் குவிப்பதன் மூலம் தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாகக் குறைவாக வைத்திருந்தால், அதன் ஏற்றுமதிக்கான போட்டி மிகவும் அதிகரிக்கும். அதே நேரத்தில் அமெரிக்க ஏற்றுமதிகள் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்ததாக மாறும்.
டாலர் எப்போதும் உலகின் முன்னணி கையிருப்பாக மாறாது என்றாலும் அது மற்ற நாடுகளின் நாணயங்களின் மீது செல்வாக்கு செலுத்தி வருகிறது. டிரம்பின் அச்சுறுத்தலுக்குப் பின்னர் இந்தப் போக்கு மேலும் துரிதப்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.