விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்
என்ன நடக்கிறது? செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம்
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பியதோடு, சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜாமீனில் வந்தவர் அமைச்சராகியிருப்பதால், அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களுக்கு ஒரு அழுத்தம் ஏற்படும் என்று பலரும் கருதுவார்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் அளித்திருப்பதால், மற்றவர்களும் இதுபோன்ற நிவாரணம் பெற முனைவார்கள் என்ற வாதத்தை நிராகரித்துவிட்டது.
நாங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கினோம், அடுத்தநாள் நீங்கள் சென்று அமைச்சராகிவிட்டீர்கள். தற்போது நீங்கள் தமிழக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர், எனவே, உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கும் எவர் ஒருவர் மீதும் தானாகவே ஒரு அழுத்தம் ஏற்பட்டுவிடக்கூடும். என்ன நடக்கிறது இங்கே? என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏஎஸ் ஓகா கேள்வி எழுப்பினார.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் தற்போதைய அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 471 நாள்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாகவும், அவரைத் தொடா்ந்து காவலில் வைத்திருப்பது அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாக இருப்பதாகவும் கூறி ஜாமீனில் விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.