வெள்ளத்தில் தவித்த 6 மாத குழந்தை; வாளியில் வைத்து காப்பாற்றிய செய்தியாளரின் நெகிழ்ச்சி அனுபவம்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
அந்தவகையில் விழுப்புரத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்திற்கு உதவியதுடன், அவர்களின் 6 மாத குழந்தையை, புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் காமராஜ் சிலரின் உதவியுடன் வாளியில் வைத்து காப்பாற்றிய நிகழ்வு பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பலரும் காமராஜின் செயலைப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் "செய்தியாளர்கள் எனப்படுபவர்கள் தனித்தவர்கள் அல்ல... சமூகத்தின் அங்கம் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்" என்று காமராஜைப் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர் காமராஜை தொடர்புக்கொண்டு பேசினோம். ``விழுப்புரம் மாவட்டத்தில் 25 வருஷம் இல்லாத அளவிற்கு இம்முறை கனமழை பெய்திருக்கிறது. இந்த மழையால் விழுப்புரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கக்கூடிய ஒரு சூழல்தான் இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மழை பெய்திருக்கிறது. பாண்டியன் நகர் பகுதியில் அதிக அளவு பாதிப்பு இருந்ததால் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தேன். இடுப்பு அளவிற்கு தண்ணீர் இருந்தது. செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது பாதிக்கப்பட்ட நபர் வந்து எங்களுடைய இரண்டு குழந்தைகள் வீட்டிற்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தீயணைப்பு துறைக்கு கொஞ்சம் அழைத்து வரச்சொல்லுங்கள் என்றார். நானும் ஃபோன் செய்து பார்த்தேன். ஆனால் தீயணைப்பு துறையினர் எங்களால் இப்போதைக்கு வர முடியாது. போட் எல்லாம் மரக்காணத்தில் இருக்கிறது என்றார்கள். தண்ணீரின் அளவு அதிகரித்துகொண்டே இருக்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரும் பயப்படுகிறார்கள். இரண்டுமே கை குழந்தைகள் அதில் ஒரு குழந்தைக்கு 6 மாதம்தான் ஆகிறது.
கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று கேட்டார்கள். சரி வாங்க என்று நான்கு பேர் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். கூடை இருந்தால் கூடையில் வைத்து கொண்டு வரலாம் என்று நினைத்தோம். பிறகு அங்கு வாளி ஒன்று இருந்தது. பிறகு வாளியை வைத்து கொண்டுவர முடிவு செய்தோம். வாளியில் பாலித்தின் கவரைபோட்டு குழந்தையை வாளிக்குள் உட்கார வைத்து ரெயின் கோர்ட் போட்டு மூடி குடையைப்பிடித்து கொண்டுவர ப்ளான் செய்தோம்.
நானும் இன்னொருத்தரும் ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டோம். அதேபோல இன்னும் இரண்டு பேர் சேர்ந்து மற்றோரு குழந்தையை எடுத்துக்கொண்டார்கள். அடிக்கடி வாளியை இறக்கி மூச்சு காற்று விடமுடிகிறதா? என்று பார்த்துக்கொண்டோம். பிறகு பத்திரமாக குழந்தைகளை மீட்டு கொண்டு வந்துவிட்டோம்" என்றார்.
தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவிகளுக்கான மதிப்பு என்பது எவராலும் அளவிடமுடியாதது. அப்படியான உதவியை செய்தவருக்கு நாமும் நமது நன்றியை தெரிவித்து கொண்டோம்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...