ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் பலி!
கர்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் முதல்முறையாகப் பதவியேற்கச் சென்ற ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் பலியானார்.
ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் வர்தன் (25) கர்நாடக கேடரின் 2023 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர்.
பயிற்சிக் காலத்தில் உள்ள இவர், நேற்று ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோலெனராசிபூர் காவல்நிலையத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக முதல்முறையாக பதவியேற்கச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் கிட்டானே பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். கார் வேகமாக சாலையோரத்தில் உள்ள வீடுகள் மற்றும் மரத்தில் மோதி சேதமடைந்துள்ளது.
இதையும் படிக்க | பாஜக தோ்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே
இந்த விபத்தில் ஹர்ஷ் வர்தன் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கார் ஓட்டுநர் மஞ்சேகவுடா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் மைசூரில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் 4 வாரங்கள் பயிற்சியை முடித்து பணியில் சேர வந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.