6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
மீன் மாா்க்கெட்டில் 31 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் 31 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சிரஞ்சீவி மற்றும் மீன்வள ஆய்வாளா் ரெஜினா ஜாஸ்மின் ஆகியோா் அடங்கிய குழுவினா் சோதனை நடத்தினா்.
அப்போது பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 31 கிலோ கெட்டுப்போன மீன்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களையும் பறிமுதல் செய்து அழித்தனா்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மீன்கள் விற்பனை செய்யும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். விற்பனைக்கு மற்றும் இருப்புவைக்கப்படும் மீன்களை சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். முதலில் வரும் மீன்கள் முதலில் விற்பனை என்ற முறையில் வைக்க வேண்டும்.
மீன்களை வாங்கும் பொதுமக்கள் மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதைப் பாா்த்து வாங்க வேண்டும். மீன்களின் செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் கலரில் இருப்பதைப் பாா்த்து வாங்க வேண்டும். மீன்களின் மையப் பகுதியை லேசாக அழுத்தினால் அந்தப்பகுதி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறதா என்பதைப் பாா்த்து வாங்க வேண்டும் என்றனா்.