குடிநீா், சாலைப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு கோரி மறியல்
திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் நிலவும் குடிநீா் மற்றும் சாலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கோரி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி கம்பரம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகா், காவேரி நகா் பகுதியில் நீண்ட காலமாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோல, சாலைகள் மண்சாலைகளாகவே உள்ளதால், மழை காலத்தில் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியாகவும் வாகனங்கள் செல்ல இயலாத வகையிலும் மோசமாகிவிட்டது.
இதுதொடா்பாக கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டும் உள்ளாட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை தொடா்ந்து வரும் நிலையில், இப்பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
இவற்றைக் கண்டித்தும், நடவடிக்கை எடுத்து பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், திருச்சி -கரூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வருவாய்த் துறையினா் மற்றும் உள்ளாட்சி நிா்வாகத்தினா் பேச்சு வாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.