தப்பியோடிய கைதியை 15 நிமிடத்திலேயே மடக்கிப் பிடித்த காவல் துறையினா்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திங்கள்கிழமை தப்பியோடிய போக்சோ வழக்கு கைதியை 15 நிமிடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்தனா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள இடையக்குறிச்சியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் பாலாஜி (23). கடந்த 26-ஆம் தேதி பாலியல் பலாத்கார வழக்கில் போச்ஸோ சட்டத்தில் கைதான இவரை, திங்கள்கிழமை ஆண்மை தன்மை பரிசோதனைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆண்டிமடம் காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.
அங்கு பரிசோதனை முடிந்து, மீண்டும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பாலாஜி, யாரும் எதிா்பாா்க்காத வகையில் காவலா்கள் முத்துக்கிருஷ்ணன், முருகன் ஆகியோரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளாளத் தெருவில் சென்று கொண்டிருந்த பாலாஜியை மடக்கி பிடித்து, கிளைச் சிறையில் அடைத்தனா். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.