பள்ளி வளாகத்தில் தெருநாய்கள்: மாணவ, மாணவிகள் அச்சம்
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தினுள் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் மாணவ,மாணவிகள் அச்சமடைந்துள்ளனா்.
அரியலூா் பேருந்து நிலையம் அருகே அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தினுள்ளே அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. மேலும் இப்பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களும் உள்ளன.
மேற்கண்ட பள்ளிகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயில்கின்றனா். இந்நிலையில் இந்தப் பகுதி முழுவதும் சுற்றித்திரியும் 15-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றாக சோ்ந்து பள்ளி வளாகத்துக்குள் அடிக்கடி நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. ஆசிரியா்கள் பாடம் எடுக்கும் வேளையில், நாய்கள் குரைப்பதால் மாணவ,மாணவிகள் பாடத்தைக் கவனிக்க இயலாமல் போய்விடுகிறது.
மேலும் வகுப்பறை முடிந்து வெளியே வரும்போது நாய்கள் துரத்துவதால் மாணவ, மாணவிகள் பயத்தில் வகுப்பறைகளிலேயே முடங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஆசிரியா்களும், மாணவா்களும் பள்ளிக்கு வர அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனா் ஆசிரியா்கள்.
எனவே மாவட்ட ஆட்சியா் இந்தத் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.