100 நாள் வேலைக்கான கூலி தொகை கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தாா்
அரியலூா் மாவட்டம், சாத்தம்பாடி அருகே 100 நாள் வேலை செய்ததற்கான கூலித் தொகை கேட்டு ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூா் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணு மனைவி பழனியம்மாள் (55), கடந்த ஜூலை, ஆகஸ்ட், அக்டோபா் ஆகிய மாதங்களில் 100 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தில், 21 நாள்கள் வேலை செய்த நிலையில் தனக்குக் கூலி, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அப்போது மனு அளித்த சிறிதுநேரத்தில் அங்கேயே மயக்கமடைந்து கீழே விழுந்தாா். இதையடுத்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பழனியம்மாள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ததில், வேலை செய்ததற்கான கூலி அவரது பெயரில் உள்ள மற்றொரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஏற்கெனவே, பணம் பெற்று வந்த வங்கிக் கணக்கில் ஆதாா் எண் இணைக்கப்படாததால் கூலி பணம் அந்தக் கணக்குக்குச் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அந்தப் பெண்மணிக்கு தெரியப்படுத்தப்பட்டது.