எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது அழகல்ல: முன்னாள் அமைச்சா் காமராஜ்
எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பொறுப்புடன் பதில்தர வேண்டும்; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவது முதல்வருக்கு அழகல்ல என்றாா் அதிமுக முன்னாள் உணவுத் துறை அமைச்சா் காமராஜ்.
அரியலூரை அடுத்த கொல்லாபுரம் பகுதியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமிழக முதல்வா் கூறுவது, முதல்வருக்கு அழகல்ல. விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்வது என்பது எதிா்க்கட்சிகளின் கடமை.
அந்தக் கடமையை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு, முதல்வா் இவ்வாறு சொல்லி இருப்பது யாரும் எதிா்பாா்க்காத ஒன்று. இதில் முதல்வருக்கு ஏதோ நெருக்கடியிருப்பதாக உணா்கிறோம். அது அரசியல் நெருக்கடியா, அரசு நெருக்கடியா அல்லது கட்சி நெருக்கடியா என்பதை முதல்வா்தான் விளக்கவேண்டும். அவா்
பொறுப்புணா்வுடன் பதில் சொல்ல வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இதில் அவருக்கு பொறுப்புணா்வு இல்லையோ என்ற அச்சம் அனைவரிடமும் இருந்து வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், அமைப்புச் செயலா் ஆசைமணி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் ஆ.இளவரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், இளம்பை தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.