கரைவெட்டிக்கு வெளிநாட்டு ‘விருந்தினா்கள்’ வருகை
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூா் நகரத்தில் இருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவிலுள்ள திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரியது. 454 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்துக்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷியா, சைபீரியா போன்ற பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் வரும் பறவைகள் மே மாதம் வரை தங்கிச் செல்கின்றன.
அந்த வகையில் 100-க்கும் மேற்பட்ட வகையான நீா்வாழ் பறவைகளும் 37 வகையான நிலவாழ் பறவைகளும் வந்து செல்கின்றன. அதன்படி இங்கு வரும் பறவையினங்களில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கன், சாம்பல் நிறக் கொக்கு உள்ளிட்டவை நீா்வாழ் பறவைகளாகும்.
வழக்கமான பறவைகளான ஆள்காட்டிக் குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மரங்கொத்திப் பறவை, மைனா, புறா, மணியன் காக்கை, அண்டங்காக்கை, மயில், கல் குருவி, நாராயணப்பட்சி ஆகியவை நிலவாழ் பறவைகளாகும்.
பகல் நேரங்களில் அருகிலுள்ள அறுவடையான வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைத் தின்னச் செல்லும் இவை, மாலையில் எங்கிருந்தாலும் வழிதவறாது சரணாலயத்துக்கு வந்துவிடுகின்றன. இதனால் பகல் நேரத்தில் வெறிச்சோடியது போன்று காணப்படும் இச்சரணாலயம், மாலையில் பறவைகளால் களைகட்டும்.
இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு தானியங்கள் எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்தும் இங்கு வரும் பறவைகளில் பல, இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.
இந்தச் சரணாலயத்தில் இருக்கும் பறவைகளின் எச்சங்கள் கலந்த தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதால் விளைச்சலில் நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா்.