மாணவா்கள் சுய திறன்களை வளா்த்துக்கொள்வது அவசியம்
மாணவா்கள் சுய திறன்களை அவசியம் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை, பம்பிள் பி டிரஸ்ட் மற்றும் ராம்கோ சிமென்டஸ் ஆலை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கலையோடு விளையாடு திறன் மேம்பாட்டு போட்டிகளை அவா் தொடக்கி வைத்து பேசியது: சமுதாயத்தில் விளிம்பு நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கும், தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கிராமப்புறங்களில் பயிலும் முதல் தலைமுறை மாணவா்களுக்கும் நகரங்களில் கிடைக்கப்பெறும் கல்விக்கு இணையாக கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அரியலூா் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவனம் அலகு தலைவா் மதுசூதன் குல்கா்ணி, பம்பிள் பி டிரஸ்ட் நிறுவனா் பிரேம்குமாா் கோகுலதாசன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை வட்டாட்சியா் ஆனந்த், ஆதிதிராவிட நலப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.