Doctor Vikatan: சிலருக்கு மட்டும் மழைநாள்களில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் சளி பிடிக்காதது ஏன்?
Doctor Vikatan: மழை நாள்களில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது சிலருக்கு மிகப் பிடித்த விஷயம். அப்படிச் சாப்பிடுகிறவர்களில் சிலருக்கு மட்டும்தான் உடனே சளி பிடித்துக்கொள்கிறது. பலருக்கு ஒன்றும் செய்வதில்லையே, அதற்கு என்ன காரணம்... அவர்களது நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
பொதுவாகவே வெயில்நாள்களில் தொற்று பாதிப்பு குறைவாகவும் மழை மற்றும் குளிர்காலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகவும் இருக்கும். மற்றபடி மழையிலோ, குளிரிலோ ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாது என்று எதுவும் இல்லை. இந்த நாள்களில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸை பொறுத்தவரை அவற்றின் டெம்ப்ரேச்சரை விடவும் அவை எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு, வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கும்போது, அதில் ஐஸ்கட்டிகள் சேர்ப்பார்கள். அந்த ஐஸ்கட்டி எவ்வளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டது என்பது கேள்விக்குரியதே.
ஐஸ்க்ரீமும் அதே போலத்தான். சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு, உடனே சாப்பிடுகிற போது ஐஸ்க்ரீமால் பிரச்னை வருவதில்லை. மழை நாள்களில் எல்லோரும் ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்ற குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதனால் விற்பனை குறைவாக இருக்கும். தயாரிக்கப்பட்டு பல நாள்கள் ஆகி, இடையில் மின்சாரம் தடைப்பட்டு, குளிர்பதனப் பெட்டி இயங்காமல் உருகி, அதில் தொற்று ஏற்பட்டு அந்த ஐஸ்க்ரீமை சாப்பிடும்போதுதான் பிரச்னை வருகிறது.
ரொம்பவும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீமை சாப்பிடும்போது தொண்டைப்பகுதியில் ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறைகிறது. அதனால் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காக ஐஸ்க்ரீமே சாப்பிடக்கூடாது என அர்த்தமில்லை. குழந்தைகள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதைத் தவிர்ப்பது சிறந்தது. சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது எந்தப் பிரச்னையும் வருவதில்லை.
வீட்டில் நாம் ஃப்ரெஷ்ஷாக ஜூஸோ, ஐஸ்க்ரீமோ தயாரித்து சாப்பிடும்போது, அது குளிர்ச்சியாக இருந்தாலும் பிரச்னை வராது. வெளியிடங்களில் தயாரிக்கப்படும் ஜூஸிலும் ஐஸ்க்ரீமிலும் பயன்படுத்தப்படும் பழம், ஐஸ், தண்ணீர், கிளாஸ், கையாள்பவர் என எல்லாவகையான சுத்தமும் கவனிக்கப்பட வேண்டும். மற்றபடி எப்போதுமே அளவுக்கதிக சூடாகவோ, அளவுக்கதிக குளிர்ச்சியாகவோ எதையும் சாப்பிடுவதைத் தவிர்த்து, மிதமான சூடு அல்லது குளிர்ச்சியில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் சரியானது. சாப்பிடும்போது எந்த உணவையும் சில நொடிகள் வாயில் வைத்திருந்து, மென்று, ரசித்துச் சாப்பிடுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.