வெள்ளக்கோவில் நகராட்சியில் திட்டப் பணிகள்: மண்டல இயக்குநா் ஆய்வு
வெள்ளக்கோவில் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நகராட்சி நிா்வாக திருப்பூா் மண்டல இயக்குநா் எம்.இளங்கோவன் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள் வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், முடிவடைந்த பணிகள் குறித்து விவரங்கள் கேட்டறிந்தனா்.
பின்னா் பணிகள் நடைபெற்று வரும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அம்ருத் திட்டப் பணிகள், குடிநீா் திட்டப் பணிகள், புதிய நகராட்சி அலுவலக கட்டுமானப் பணி மற்றும் நகராட்சி உரக்கிடங்கு, புதிய பேருந்து நிலையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன், நகராட்சி பொறியாளா் ஜி. காளீஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.