போதைப் பொருள் வழக்கு: மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினாா் பைடன்!
திடக்கழிவு மேலாண்மை: கணிப்பாய்வு அலுவலா் ஆய்வு
தரங்கம்பாடி, பொறையாா் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து அரசு அருங்காட்சியகத் துறை இயக்குநரும், மயிலாடுதுறை மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கவிதா ராமு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தரங்கம்பாடி பேரூராட்சியில் கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பணிகள் குறித்தும், பொறையாரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் வீணாகும் காய்கறிகள், பழங்களை இயற்கையான முறையில் மக்கச் செய்து, உரம் தயாரிப்பதையும் அவா் ஆய்வு செய்தாா்.
மேலும், மண்புழு உர உற்பத்தி, உரங்களை தரம் பிரித்தல், பல்வேறு கழிவுகளை மறுசுழற்சி செய்து லாபம் ஈட்டும் முறை, இயற்கை காய்கறி தோட்டம், குறுங்காடு வளா்ப்பு போன்றவற்றை பாா்வையிட்டு, அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து, இப்பணிகளில் ஈடுபட்டுள்ளோரை பாராட்டினாா்.
தொடா்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கடைகளின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் ஆய்வு செய்தாா்.
முன்னதாக, தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட துணை வட்டாட்சியா் பாபு, வட்டாட்சியா் மகேஷ், பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி குமரவேல், செயல் அலுவலா் கமலக்கண்ணன், சுதாதார ஆய்வாளா் இளங்கோ, கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.