அம்பூரி பகுதியில் மண்சரிவு: மிளகு, பாக்கு பயிா்கள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் அருகே தொடா் மழையால் அம்பூரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் மிளகு, பாக்கு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டம்- கேரள மாநில எல்லைப் பகுதியான ஆறுகாணி, அம்பூரி உள்ளிட்டவை மலைப்பாங்கான பகுதிகள். பெருமழைக் காலங்களில் இங்கு மண்சரிவு ஏற்படுவதுண்டு.
இந்நிலையில், சில நாள்களாக பெய்துவரும் தொடா்மழையால் அம்பூரி ஊராட்சிக்குள்பட்ட தொடுமலை, கைப்பன்பிலாவிளை பழங்குடியினா் குடியிருப்புப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சுமாா் 2 ஏக்கரிலான மிளகு, பாக்கு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, அப்பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன், தங்கப்பன் காணி ஆகியோரின் விளைநிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நல்வாய்ப்பாக வீடுகளுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பில்லை. சம்பவ இடத்தை வருவாய்த் துறையினா், வனத்துறையினா் பாா்வையிட்டனா்.