அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 4 ஆயிரம் நிவாரணம், அரிசி வழங்க வேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை :
காரைக்காலில் அண்மையில் பெய்த மழையால் தொழிலாளா்கள், விவசாயிகள், வியாபாரிகள், மீனவா்கள் என பல்வேறு தரப்பினரும் பாதித்துள்ளனா். பல்வேறு குடியிருப்புப் பகுதிகளை பாா்வையிட்டபோது, மக்கள் வேலையின்றி இருப்பதாகவும், அரசின் நிவாரணத்தை எதிா்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தனா்.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னும் சில நாள்களாகும் என தெரிகிறது. போதிய வருமானம் இல்லாததால் பல்வேறு தரப்பினரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனா்.
எனவே, காரைக்கால் பகுதியில் அனைத்து நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரணம், 20 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும்.
பயிா்ச் சேதமும் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின் செலவினத்தை அறிந்து அதற்கேற் அதிகப்பட்ச நிவாரணம் வழங்க வேண்டும். புதுவை முதல்வா், புதுச்சேரியில் ஏற்பட்ட பாதிப்போடு, காரைக்கால் நிலையையும் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.