`இனிமே பயப்பட மாட்டேன்கா..!’ - விபத்தில் கால்களை இழந்த விஜய்; கடை வைத்து கொடுத்த விகடன் வாசகர்கள்
ரயில் விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யையும், 'கால் இல்லைன்னா என்ன; தாலிக்கட்ட கை தானே வேணும்' என்று, விஜய்யை மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவையும் யாராலுமே மறக்க முடியாது.
2018-ல் விஜய்க்கு ஏற்பட்ட ரயில் விபத்தையும், பிறகு விஜய்-ஷில்பா திருமணத்தையும் விகடன் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதன்பிறகு, மேல் சிகிச்சைக்காகவும் செயற்கைக்கால் பொருத்துவதற்காகவும் சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த விஜய்-ஷில்பா தம்பதியின் பேட்டியை ஆனந்த விகடனில் வெளியிட்டிருந்தோம். அதன் நல்ல விளைவாக, விஜய்க்கு எடை குறைவான செயற்கைக்கால் வைப்பதற்கு விகடன் வாசகி ஒருவரும் உதவி செய்தார். இந்த தம்பதியருக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்ற மாதம் (அக்டோபர்), ''நான் நிறைய இடங்கள்ல வேலைக்கு ட்ரை பண்ணேன். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கிறதால, இன்டர்வியூவுக்குக் கூப்பிடுறாங்க. ஆனா, எனக்கு ரெண்டு காலும் இல்லைன்னு தெரிஞ்சவுடனே 'கூப்பிடுறோம்'னு சொல்லி அனுப்பிடுறாங்க. வேற வழியில்லாம, நானும் ட்ரெயின்ல வெள்ளரிக்கா, மாங்கா விக்க ஆரம்பிச்சேன். ஒருதடவை, என்னோட செயற்கைக்கால் தடுமாறி கூட்டத்துக்குள்ள விழுந்துட்டேன். அதுல, என்னோட எடை குறைவான செயற்கைக்கால் உடைஞ்சு போச்சு. இப்போ, பழையபடி எடை அதிகமான மரக்கால்களை வெச்சுக்கிட்டு வியாபாரத்துக்குப் போறேன். அது உரசி உரசி தினமும் கால்ல ரத்தம் வருது. மரக்கால் வெச்சிருக்கிறதால, ஊனி நடக்க ஒரு கையில கம்பு, இன்னொரு கையில வெள்ளரிக்கா கூடைன்னு என் பிள்ளைங்களுக்காகப் போராடிக்கிட்டிருக்கேன். சி.எம் ஐயா மனசு வெச்சு, எனக்கு உட்கார்ந்து சிஸ்டம்ல பார்க்கிற வேலை கொடுத்தா, என் குழந்தைகளை நல்லா வளர்த்திடுவேன்'' என்று தன்னுடைய தற்போதைய நிலைமையை விகடனிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய வேண்டுகோளை விகடன் டிஜிட்டல் தளத்தில் பேட்டியாக வெளியிட்டிருந்தோம். இதோ, அதற்கும் மிக நல்ல பலன் கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விஜய்யே சொல்கிறார்.
''விகடன்ல என்னோட பேட்டி வந்த ஒரு வாரத்துல, கஜேந்திரன் என்கிற போலீஸ்காரர் எனக்கு போன் செஞ்சு பேசினார்க்கா. உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார். நானும் வாங்க சார்னு சொன்னேன். தீபாவளிக்கு மறுநாள் என் வீட்டுக்கு வந்தார். என்னோட நிலைமையை, எங்க வீட்டோட நிலைமையை நேர்ல பார்த்து ரொம்ப வருத்தப்பட்டார். நான் ஆரம்பத்துல டி சர்ட் மாதிரி ட்ரெயின்ல துணி வியாபாரம்தானே பண்ணிக்கிட்டிருந்தேன். அதனால, கஜேந்திரன் சார் சின்னதா ஒரு துணிக்கடை வெச்சிக் கொடுத்திருக்கார்.
கடைக்கான அட்வான்ஸ் 30 ஆயிரம், துணியெடுக்க 30 ஆயிரம், வாடகை காசு மாசம் 4 ஆயிரம் எல்லாம் கொடுத்திருக்கார். எங்க குடும்பம் வாழறதுக்கான வழியை விகடன் காட்டிடுச்சு. இனிமே நான் வாழ்க்கையைப் பார்த்து பயப்படவே மாட்டேன்கா'' என்று நெகிழ்ச்சியாவும் நம்பிக்கையுடனும் பேசினார்.
விஜய்க்கு உதவி செய்த கஜேந்திரன் அவர்களிடம் பேசினோம். ''நான் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவன்ங்க. காலேஜ் படிக்கிறப்போ, பிளாட்ஃபார்ம்ல யாசகம் கேட்கிறவங்களுக்கு சில அறக்கட்டளைகள்ல இருந்து சாப்பாடு கொண்டு வந்து தருவாங்க. யாசகம் கேட்கிறவங்களோட நானும் உட்கார்ந்து அந்தச் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டிருக்கேன்.
எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். படிச்சது சென்னையில. ஹாஸ்டலுக்குக் கொடுக்க பணமில்லாம கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல படுத்து தூங்கியிருக்கேன். எவ்வளளோ போராட்டத்துக்கு மத்தியிலதான், என்னோட மெக்கானிக்கல் இன்ஜினியர் படிப்பை முடிச்சேன். கரூர்ல போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை கிடைச்சிது. பசிக்கொடுமை தெரிஞ்சவனுக்குத்தானே பசியோட வேதனை தெரியும். அதனால, பசிச்சவங்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்க ஆரம்பிச்சேன். என்னோட சில ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்தாங்க. 'உதவும் கரங்கள்'னு ஒரு குரூப்பை உருவாக்கி சின்ன சின்னதா உதவி செஞ்சிக்கிட்டிருக்கோம். இந்த விஜய் பத்தின விஷயத்தை, 3-6-20 தேதி போட்ட ஆனந்த விகடன்ல பேட்டியா வெளியிட்டிருந்தாங்க.
அந்தப் பேட்டியைப் பார்த்துட்டு, சிங்கப்பூர்ல இருக்கிற வெங்கட் நாராயணன் என்கிற விகடன் வாசகர், எங்களோட' உதவும் கரங்கள்' அமைப்புக்கு உதவி செய்ய ஆரம்பிச்சார். அவர்தான் இந்த முறையும் விகடன்ல வந்திருந்த விஜய் பேட்டியோட லிங்க்கை எனக்கு அனுப்பி, அவருக்கு உதவி செய்ய சொன்னார். அதுக்காக ஒரு லட்சம் பணமும் அனுப்பியிருந்தார். தவிர, விஜய்க்கு உதவிகேட்டு நானும் ஸ்டேட்டஸ்ல ஸ்டோரியை வெச்சேன். அதுல 20 ஆயிரம் கிடைச்சிது. இந்த பணத்தையெல்லாம் வெச்சிதான் கடை அட்வான்ஸ், வாடகை, துணி எல்லாம் வாங்கினோம்.
அவங்க வீடும் மழை பெய்ஞ்சா ஒழுகிட்டிருந்துச்சு. அதையும் இந்தக் காசை வெச்சுதான் சரி செஞ்சு கொடுத்தோம். விஜயோட ரெண்டு பசங்களோட படிப்புக்கு 10 ஆயிரம், 6 மாச கடை வாடகையையும் நானே கொடுக்கிறதா சொல்லியிருக்கேன். விஜய் இனிமே நல்லா இருப்பாருங்க'' என்கிறார் பேரன்புடன். கஜேந்திரன் தற்போது சென்னையில் கிரேடு 2 பி.சி-ஆக வேலைபார்த்து வருகிறார்.
சிங்கப்பூர் வெங்கட் நாராயணன், கஜேந்திரன், ஸ்டேட்டஸ்ல ஸ்டோரியை பாத்தேவிஜய்க்கு செய்த உதவிகளை நினைக்கையில், 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்கிற தாயுமானவரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இதைத்தாண்டி வேறென்ன சொல்ல..!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...