காவலர் உடையில் சைபர் செல்லுக்கே விடியோ கால்! பிறகென்ன? வைரலானது விடியோ
`நேற்றுவரை பணி’ - 33 ஆண்டுகளாக நீர்நிலைகள், ஆலயங்களை சீர்படுத்திய நெல்லை முத்துகிருஷ்ணன் காலமானார்
நெல்லை உழவாரப்பணி குழாம் அமைப்பை ஏற்படுத்தி 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த முன்னாள் விமானப்படை வீரான முத்துகிருஷ்ணன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.
நெல்லை உழவாரப்பணி குழாம் மூலம் தொடர்ந்தது 1200 முறைக்கும் அதிகமாக உழவாரப் பணிகளைச் செய்தவர். அதில்,250-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் கும்பாபிஷேகம் கண்டு, நடைமுறை வழிபாட்டுக்கு வந்தது. 60-க்கும் அதிகமான தெப்பக்குளங்கள் மற்றும் கோவில் கிணறுகள் தூர்வாரப்பாட்டு நீர் தேக்கம் பெற்றது.
திருநெல்வேலியின் ஜீவநாடியான தாமிரபரணி நதி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என்று நினைத்த, சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் க.சக்திநாதன் இவர்களுடைய பணிகளைப் பார்த்து `நம் தாமிரபரணி’ என்ற அமைப்பை உருவாக்கி, முத்துகிருஷ்ணனை அதற்குத் தலைமை பொறுப்பாளராக ஆக்கினார்.
பல்வேறு அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நெல்லை உழவாரப்பணி தொண்டர்களைக் கொண்ட குழுவாக இணைந்து இவர்கள் தாமிரபரணி நதிக்கரைகளை சீர்படுத்தி புத்துயிர் கொடுத்தனர்.
அமைதியான முறையில் அவர் செய்து வரும் இந்தச் சாதனையைப் பாராட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் காசோலையுடன்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருதை வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கரம், இந்தமுறை அக்டோபர் 2018-ல் கொண்டாடப்பட்டது. மக்கள் இந்த சமயத்தில் எந்த வித சிரமங்களையும் சந்திக்கக் கூடாது என்று, நதிகளையும், நதிக்கரையோர பகுதிகள், படித்துறைகள், மண்டபங்கள் ஆகியவற்றையும் தாமிரபரணி புஷ்கரத்துக்காக ஓராண்டுக் காலமாக வாரம்தோறும் தொடர்ந்து தூய்மை செய்தனர்.
பொதிகை மலை தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆறு பாய்கின்ற 149 கிலோ மீட்டர் தூரத்தில் 64 தீர்த்த கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடி வழிபட அனுமதிக்கப்பட்டது. அதில் 35 தீர்த்த கட்டங்களில் மிகவும் சிறப்பாக இவர்கள் பணிகளை செய்தனர்.
முட்களை அகற்றி மலம், மது பாட்டில்கள், பழைய துணிகள் என வண்டி வண்டியாகக் குப்பைகள் அனைத்தையும் நீக்கி தூய்மை செய்தனர். மக்களுக்கு பயன்படும் விதமாக அவ்விடங்களையும், மண்டபங்களையும் செப்பனிட்டு திருப்பணி செய்தது முக்கியமானது. தாமிரபரணி புஷ்கரத்துக்கு இவர்கள் செய்த பணிகளால் மக்கள் தூய்மையான இடங்களில் நீராடினர்.
இந்தப் பணிகளைக் கண்ட அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இவர்களைப் பாராட்டி கௌரவித்தார்.
2016-ல் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 2.6 ஏக்கர் அளவுள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் தெப்பகுளத்தை தூர்வாரி செப்பனிட்டனர். 35 ஆண்டுகளாகத் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்த 1.6 ஏக்கர் அளவுள்ள பூமிநாதசுவாமி கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் வழிகளை எல்லாம் மிகவும் பாடுபட்டு சீராக்கி தண்ணீர் கொண்டு வந்தனர். தூர்வாரும்போது அங்குள்ள விவசாயிகளுக்கு தேவைப்படும் இந்த சத்துள்ள மண்ணை (சகதி உரங்களை) டிராக்டர் கொண்டு வந்தால் எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்தனர். இவர்கள் ஜேசிபி மூலம் 500 டிராக்டர்களுக்கு மண்ணை அள்ளிப் போட்டனர். விவசாயிகளின் வயல் வரப்புகளுக்கு அவை பயன்பட்டது. இன்று தண்ணீர் நிறைந்து, பலரும் பயனடையும் விதமாக அழகாகக் காட்சி அளிக்கிறது அந்தத் தெப்பக்குளம். இதனால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் அதிக முறை ஆலய திருப்பணிகள் செய்த இவர்கள் கும்பகோணம், திருச்சி, திருக்கடவூர், காஞ்சிபுரம், என பிற மாவட்டங்களில் உள்ள ஆலயத்திலும் பணி செய்தனர், அடுத்து கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை, விருபாக்சிபுரம், ஹம்பி ஆகிய ஆலயங்களிலும் இவர்கள் பணி தொடர்ந்தது. ஆண்டுக்கு நான்கு, ஐந்து முறை வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள ஆலயங்களில் பணி செய்வது வழக்கம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் என்ற பேதம் இன்றி எல்லா புராதன ஆலயங்களிலும் உழவாரப்பணி செய்வது இவர்களது வழக்கம்.
இவர்களது பணிகளை கண்ட இந்துசமய அறநிலைத்துறை அனைத்து திருக்கோவில்களிலும் பணி செய்ய 25-10-1997 அன்று அனுமதி வழங்கியது.
நெல்லை உழவாரப்பணி குழாமின் பணிகளை பாராட்டிய திருவாடுதுறை ஆதினம் சமயத்தொண்டுக்காக இளைஞர்களை முறையாக வழி நடத்தி வருவதால் "மாதவ சிவஞான சுவாமிகள்” விருதை 09-09-1998 அன்று வழங்கி சிறப்பித்தது.
சமீபத்தில், தமிழ் முழக்கப்பேரவை சார்பில் நெல்லை சைவசபையில் இவரது பணிகளை பாராட்டு விழா நடந்தியது.
நேற்றுவரை திருப்பணி செய்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை செண்பகராம நல்லூர் ஆலயத்தில் வழக்கம் போல உழவாரப்பணி அன்பர்களுடன் இணைந்து பணியாற்றினார். மாலை பணி செய்த அன்பர்களை வழி அனுப்பி விட்டு இரவு காரை ஓட்டிக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு சற்று சோர்வாக உள்ளதாக கூறியவர் இரண்டு நிமிடத்தில் இறைவனோடு கலந்து விட்டார்.
பாளையங்கோட்டைகே.டி.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் 3 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY