காப்பாற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம்... வெட்டாமல், சாலை போட மாற்று ஏற்பாட...
லத்தியை பிடுங்கி காவலர்களை தாக்கிய கும்பல்; குடிபோதையில் அட்டகாசம் - ராஜபாளையம் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விசாரிக்க வந்த காவலர்களை, அவர்கள் கொண்டு வந்திருந்த லத்தியை பிடுங்கி தாக்கிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே உள்ள டாஸ்மாக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து அதே ஊரை சேர்நத் இசக்கி என்பவரை தாக்கி உள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இசக்கி, ரத்த காயங்களுடன் வந்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இசக்கி மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடிச்சென்றனர். அப்போது, போலீஸாரின் விசாரணையில், அவர்கள் நேருசிலை பின்புறம் உள்ள மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற ராஜபாளையனயம் வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர், இசக்கி மீது தாக்குதல் நடத்திய அனைவரும் மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த கும்பல், காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து, கையில் இருந்த லத்தியை பிடுங்கி போலீஸை தாக்கியுள்ளனர்.
இதைத்தடுக்க சென்ற மற்றொரு காவலரையும் அந்த கும்பல் ஆபாசமாக திட்டிக் கொண்டே சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து காயமடைந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சக போலீஸார், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையை, காவலர்களை தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸை தாக்குவது தொடர்பாக வைரலாக பரவி வரும் இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தாக்கப்பட்ட காவலர்கள் அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் கீழ ஆவரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்" என்றனர்.