`எந்த முன்னாள் காதலனும் விரும்பும் சிறந்த விஷயம் அது’ - ஐஸ்வர்யா ராய் திருமணம் குறித்து சல்மான் கான்
2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிகை ஐஸ்வர்யா ராயும் காதலித்து வந்தனர். ஆனால் 2002-ம் ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட, அவர்கள் பிரிந்துவிட்டனர். இருவரும் பிரிந்து விட்டாலும் ஒருபோதும் தங்களது உறவுகள் குறித்து வெளிப்படையாக பேசிக்கொண்டதில்லை. அதுவும் சல்மான் கான் தனது சொந்த விவகாரம் குறித்து வெளியில் பேசவே மாட்டார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் தனித்தனி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சன் குடும்பத்தில் மருமகளாகிவிட்டார். ஆனால் சல்மான் கான் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை.
ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொள்ளமாட்டார். அப்படியே கலந்து கொண்டாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளமாட்டார்கள். அந்த அளவுக்கு இருவரும் ஒதுங்கியே செல்கின்றனர். தற்போது ஐஸ்வர்யா ராய் திருமண வாழ்க்கை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து விலகி தனியாக வசிக்கும் ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் வீட்டு நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்வதில்லை என்றும், ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளுக்கு அவரது கணவர் பிறந்தநாள் வாழ்த்துக்கூட தெரிவிக்கவில்லை என்றெல்லாம் செய்திகள் பாலிவுட்டில் பறக்கிறது.
மேலும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் அபிஷேக் பச்சன் வேறு ஒரு நடிகையை காதலிப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சல்மான் கான் முதல் முறையாக ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டபோது அவரிடம் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்யப்போவதாக வெளியாகி இருக்கும் செய்தி குறித்து கேள்வி எழுப்பட்டபோது அதற்கு சல்மான் கான் பதிலளித்தார்.
அதில், ``இதில் நான் என்ன செய்ய முடியும். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவருடையது என்று நம்புபவன் நான். அமைதியாக இருப்பது சிறந்தது என்று நம்புபவன். அவர் இப்போது வேறு ஒருவருடைய மனைவி. மிகப்பெரிய குடும்பத்தில் திருமணம் செய்திருக்கிறார்.
அவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அபிஷேக் பச்சன் சிறந்தவர். எந்த ஒரு முன்னாள் காதலனும் விரும்பும் சிறந்த விஷயம் இதுதான். வேண்டாம் என்று உறவு முடிவுக்கு வந்துவிட்டால் நீங்கள் இல்லாமல் அந்த நபர் கஷ்டப்படுவதை விரும்பமாட்டீர்கள். நீங்கள் இல்லாமல் அந்த நபர் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். இதன் மூலம் உங்களிடம் குற்றம் இல்லை என்ற மனநிலை உங்களிடம் ஏற்படுகிறது. நீங்கள் இல்லாமல் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதுதான் சிறந்தது. நானும் அப்படித்தான் உணர்கிறேன்''என்றார். சல்மான் கான் பேசிய இந்த விடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...