எலி மருந்து வாடை உயிரைப் பறிக்குமா? - மருத்துவரின் விளக்கம் என்ன?
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் Pest control, Rat Control விளம்பரங்கள் சர்வ சாதாரணமாகக் கண்களுக்குத் தென்படும். தங்கள் வீடுகளில் கரப்பான் பூச்சித்தொல்லை, எலித்தொல்லை இருப்பவர்கள் அந்த விளம்பரங்களில் இருக்கிற எண்களைத் தொடர்புகொண்டு, அதற்கான மருந்தை வைக்கவோ, தெளிக்கவோ கேட்பார்கள். இது கிட்டத்தட்ட நம் வீடுகளில் ஒருமுறையாவது நடந்திருக்கும். இதேபோல் தான் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த கிரிதரன் - பவித்ரா தம்பதியர் தங்களுடைய வீட்டில் Rat Control-க்கு மருந்தடிக்க, ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி, கடந்த 13ஆம் தேதி மாலை 5 மணி அளவில் எலி மருந்து வைப்பதற்காக ஒரு நிறுவனத்திலிருந்து வந்த இரண்டு நபர்கள், வீட்டில் எலி மருந்து வைத்து விட்டு, மேற்கொண்டு எலி வராமல் இருப்பதற்காக மருந்து தெளித்து விட்டுச் சென்றிருக்கின்றனர். இவ்வாறிருக்க அன்று நள்ளிரவு 12 மணியளவில் அவர்களுடைய 6 வயது குழந்தை வைஷாலினிக்கு வாந்தி ஏற்பட்டிருக்கிறது. பின்பு அனைவரும் தூங்கிவிட்ட நிலையில் அதிகாலை 3 மணிக்கு, அவர்களுடைய இன்னொரு குழந்தை உள்பட அனைவருக்குமே வாந்தி மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலறிந்து காரில் வந்த கிரிதரனின் நண்பர் மகேந்திரன், அனைவரையும் கோவூர் மாதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர்களுடைய இரண்டு குழந்தைகளுமே இறந்துவிட்டனர். கிரிதரன் - பவித்ரா தம்பதியர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எலி மருந்து நெடி, உயிரையே பறிக்குமா என்று சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.
''என்ன மருந்து பயன்படுத்தினார்கள்; அதை என்ன அடர்த்தியில் (கான்சன்ட்ரேஷன்) பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஓவர் டோஸ் பயன்படுத்தினார்களா; கிச்சனில் மட்டும் பயன்படுத்தினார்களா; வீடு முழுக்க மருந்து தெளித்தார்களா என்பன போன்ற தகவல்கள் இன்னமும் தெரியவில்லை. என்றாலும், எலி மருந்தின் நெடி குழந்தைகள் மரணடையும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டதாக இருந்திருக்கிறது என்கிற தகவல் புதிதாகவே இருக்கிறது.
குழந்தைகள் மரணமடைந்தது, பெரியவர்களும் பாதிக்கப்பட்டதைப் பார்க்கும்போது தெளிக்கப்பட்ட மருந்து ஹை டோசேஜில் இருந்திருக்க வேண்டும். பொதுவாக Pest control, Rat Control செய்யும்போது, அந்த வீட்டுக்குள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை செல்லக்கூடாது என்று அறிவுறுத்துவார்கள். மருந்து தெளித்தவர்கள் அதை இந்தக் குடும்பத்திடம் சொன்னார்களா; அவர்கள் சொல்லியும் இவர்கள் அதன் சீரியஸ் தன்மையை உணராமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார்களா போன்ற கேள்விகளும் இந்த சம்பவத்தில் எழுகின்றன.
கிடைத்த தகவலின்படி, மாலை 5 மணிக்கு Rat Control மருந்து தெளிக்கப்பட்டிருக்கிறது. இரவு அந்த வீட்டுக்குள்தான் குடும்பமாக உறங்கியிருக்கிறார்கள். மருந்து ஸ்பிரே செய்யப்பட்டிருப்பதால், அபாயகரமான அளவுக்கு அதைச் சுவாசித்து விட்டிருக்கிறார்கள். கிச்சனில் மட்டுமே மருந்து ஸ்பிரே செய்யப்பட்டிருந்தால்கூட, அது காற்றில் கலந்து மற்ற அறைகளுக்கும் வரும். அந்த மருந்து சுவாசம் வழியாக நுரையீரலுக்குச் சென்று ரத்தத்தில் கலந்து விடும். Rat Control மருந்து ஸ்பிரே செய்யப்பட்ட வீட்டில் அன்று இரவு தங்கியதுதான் இப்படியொரு துயரத்துக்குக் காரணமாகி விட்டது'' என்கிறார் மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா.