Maruti Suzuki Dzire: `இருங்க பாய்...' அசத்திய டிசையர்; சாத்தியமானது எப்படி?
முன்பெல்லாம் கூகுளில் Maruti Suzuki Dzire என்று டைப் செய்தால் Maintenance, Mileage, Service என்றுதான் வரும். ஆனால், இப்போது அப்படி இல்லை. நிலைமையே வேறு. 5 Star Rating, Safety என்றெல்லாம் வருகிறது.
‛ஏய், நீ இப்படிலாம் பேசி நான் பார்த்ததே இல்லபா’ என்பதுபோல்தான் இது பார்க்கவே கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
காரணம் - லேட்டஸ்ட்டாக நடந்த குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது மாருதி சுஸூகி டிசையர் கார். மஹிந்திரா, டாடாவுக்கு அடுத்து - குளோபல் என்கேப் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய ஒரு இந்திய கார் நிறுவனமாக மாருதி மாறிவிட்டது. இதுவே பழைய டிசையர் வெறும் 2 ஸ்டார்தான் வாங்கியிருந்தது.
மஹிந்திரா தார் ராக்ஸ், எக்ஸ்யூவி 400 போன்ற கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கின்றன. ஆனால் லாஞ்ச் ஆன வாரமே, சூடாக ஒரு புது கார் க்ராஷ் டெஸ்ட் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது என்றால், அது டிசையர்தான். கார் லாஞ்ச் ஆனதுமே, வாலன்ட்டியராக குளோபல் என்கேப் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, க்ராஷ் டெஸ்ட்டுக்குப் பரிந்துரைத்ததாம் மாருதி.
AOP (Adult Occupant Protection) எனும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ஏரியாவில், டிசையர் 34-க்கு 31.24 புள்ளிகள் வாங்கிக் கலக்கியிருக்கிறது. அதேபோல் COP (Child Occupant Protection) எனும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு செக்ஷனில் 39.20/42 புள்ளிகள் பெற்றிருக்கிறது. 18 மாதம் மற்றும் 3 வயதுக் குழந்தை டம்மி பொம்மைகளை வைத்து பேரியரில் இடித்துச் சோதனை செய்தபோது, முழுப் பாதுகாப்பு அளித்திருக்கிறதாம் டிசையர். இதன் CRS (Child Restraint System) இன்ஸ்டாலேஷன் பிரமாதமாக இருப்பதுதான் காரணம்.
போன வாரம்தான் ரிலீஸ் ஆனது மாருதி சுஸூகியின் டிசையர் எனும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன். ஃபேஸ்லிஃப்ட் என்று சொல்ல முடியாதபடி, இதை மொத்தமாக மாற்றியிருந்தது மாருதி. இதன் கிரில்லிலேயே மாற்றம் தொடங்கியிருந்தது. ஆனால், இதன் பூட் ஏரியா சிலருக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள். உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்; ப்ளீஸ்! ஆனால், இந்தக் குட்டி பின் பக்க டிக்கியும், அதன் மேலுள்ள குட்டி ஸ்பாய்லரும்தான் காரின் டைனமிக்ஸைப் பாதிக்காத வண்ணம் இருக்கிறது என்பதும் நியாயம். ஆனாலும் இதன் பூட் ஸ்பேஸ் பெரிதாகக் குறையவில்லை. டூர் அடிக்க வசதியாக இருக்கும்.
இன்னொரு விஷயத்திலும் மாருதி மிகவும் கஞ்சத்தனம் காட்டும். அது வசதிகள் ஏரியா. இப்போது அந்தக் குறையும் இந்த டிசையரில் இல்லை. இதன் டாப் எண்டான ZXi+ வேரியன்ட்டில் ஏகப்பட்ட வசதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்ஸ், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், முன் பக்க எல்இடி பனி விளக்குகள், 9 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆர்க்கமைஸ் சரவுண்ட் சிஸ்டம், சிங்கிள் பேன் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் போன் சார்ஜர், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், தானாக மடியும் ஆட்டோ ஃபோல்டிங் மிரர்கள், 360 டிகிரி கேமரா என்று கலக்குகிறது.
இன்ஜினைப் பொருத்தவரைதான் எதையும் மாற்றவில்லை மாருதி. ஸ்விஃப்ட்டில் இருக்கும் அதே Z12E பெட்ரோல் இன்ஜின்தான். 82hp பவரும், 112Nm டார்க்கும் தரும் 3 சிலிண்டர் NA செட்அப்தான். இதன் 4 ட்ரிம்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸான AMT-யும் உண்டு. வழக்கம்போல் சிஎன்ஜி -யையும் கைவிடவில்லை மாருதி. VXi, ZXi ட்ரிம்களில் இந்த 69.75hp பவரும், 101.8Nm டார்க்கும் தரும் சிஎன்ஜி சிலிண்டர் செட்அப்பும் இருக்கிறது.
இதன் அராய் மைலேஜாக மேனுவலுக்கு 24.79 கிமீ-யும், ஆட்டோமேட்டிக்குக்கு 25.71 கிமீ-யும், சிஎன்ஜி-க்கு 33.73 கிமீ-யும் க்ளெய்ம் செய்கிறது. நிச்சயம் இதன் சிஎன்ஜி வேரியன்ட், ரியல் டைமில் 25 கிமீ வரை மைலேஜ் தரலாம் என்று நினைக்கிறேன்.
வழக்கம்போல் மொத்தம் LXi, VXi, ZXi, ZXi+ என 4 ட்ரிம்களில் இதை அறிமுகப்படுத்தி இருக்கிறது மாருதி. ஆரம்ப விலையாக எக்ஸ் ஷோரூம் விலை 6.79 லட்சம் முதல் 10.14 லட்சம் வரை வருகிறது. நம் சென்னையைப் பொருத்தவரை இதன் மேனுவல் டாப் மாடலின் ஆன்ரோடு விலை ரூ.10.81 லட்சமும், ஆட்டோமேட்டிக் டாப் மாடலுக்கு ரூ.12.89 லட்சமும் வருகிறது.
நன்றாக நினைவிருக்கிறது. மாருதி சுஸூகியின் எஸ்-ப்ரெஸ்ஸோ கார் ரிலீஸின்போது, குளோபல் என்கேப் அதிகாரிகளே, ‛அட்டைப் பெட்டி மாதிரி கார் தயாரிக்கிறதை நிறுத்துங்க’ என்று மாருதியைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இனி யாரும் மாருதியை நாக்கு மேல பல்லைப் போட்டு யாரும் பேச முடியாது. டிசையரின் இந்த வெறித்தனமான ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பற்றி என்ன நினைக்கிறீங்க?