Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந...
திடீரென பூச்சியாய் மாறிய மனிதனின் கதை - காஃப்காவின் `உருமாற்றம்’ | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
20ம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவரான பிரான்ஸ் காஃப்கா பற்றிய முக்கியமான பகிர்வு..
காஃப்காவின் (Franz Kafka) முக்கியச் சிறுகதைகளுள் ஒன்று, 'The Metamorphosis'. இக்கதை, 1915 ஆம் ஆண்டு வெளியானது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கதை, இன்றும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது ஆச்சரியமே!
இக்கதையை,'உருமாற்றம்' என்ற பெயரில் தமிழில் ச.வின்சென்ட் அவர்கள், திறம்பட மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கொடுங்கனவுகளில் இருந்து ஒருநாள் அதிகாலை விழித்துக் கொள்ளும் கிரிகோர் சாம்சா (Gregor Samsa), தான் ஒரு கரப்பான் பூச்சியாக உருமாறியிருப்பதை உணர்கிறான். உருமாற்றம் அடைந்தாலும், தான்னால் இனி வேலைக்குச் செல்ல முடியாதே எனக் கவலை கொள்கிறான்.
வேலைக்குச் செல்லாவிட்டால் முதலாளி கோபித்துக் கொள்வார். சம்பளம் வராது. சம்பளம் வராவிடில், வீட்டில் மதிப்பு இல்லை. குறிப்பாக தந்தையின் இழி சொற்களுக்கு இரையாக வேண்டும். எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கிறான் சாம்சா.
துணிந்து எழ முயல்கிறான். ஆனால், அவனால் எழ முடியாமல் போகிறது. அவனுடைய ராட்சத உடலும், மெலிந்த கால்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன.
நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காத சாம்சாவை வெளியே வரச் சொல்லி, அவனுடைய தாயும் தந்தையும் வற்புறுத்துகிறார்கள். சாம்சாவின் தங்கையான கிரிட்டும் மற்றொரு பக்கம் அதே முயற்சியில் ஈடுபடுகிறாள்.
இதற்கிடையே, சாம்சாவைத் தேடி அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமை எழுத்தர் அவன் வீட்டுக்கே வந்துவிடுகிறார். சாம்சாவை, அறையிலிருந்து வெளியே வரவழைக்கும் முயற்சியில் அவரும் இணைந்து கொள்கிறார்.
பொறுமையிழந்த அவர்கள், கதவை உடைக்க ஒருவரை ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் சற்று நேரத்தில்,'நானே வெளியே வருகிறேன்...' என்கிறான் சாம்சா. அறைக்கு வெளியே நிற்கும் தலைமை எழுத்தருக்கு, சாம்சாவினுடைய குரல் வித்தியாசமாகத் தெரிகிறது. 'இது சாம்சாவுடைய குரலே அல்ல, ஏதோ ஒரு மிருகத்தினுடைய குரல்...' என்கிறார்.
வெளியே சென்றால் தன்னுடைய உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், எப்படித் தன்னை அவர்கள் எதிர்கொள்வார்கள் என்கிற பயம் சாம்சாவை நடுங்க வைக்கிறது. ஆனால் அவர்கள் தரும் நெருக்கடியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இறுதியாக அறையை விட்டு வெளியே வந்துவிடுகிறான் சாம்சா.
இதன் பிறகு என்ன நடந்தது என்பதே உருமாற்றத்தின் மீதிக்கதை.
காஃப்காவின் கதைகளில், உலக மக்கள் அனைவராலும் விரும்பி வாசிக்கப்படும் கதை, உருமாற்றமே!
'பூச்சியாக மாறிவிடும் மனிதன்' என சாதாரண ஃபேண்டஸி கதையாக உருமாற்றத்தை ஒதுக்கிவிட முடியாது. இது, ஒரு தனி மனிதனின் கதை அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பு.
அன்றாட குடும்ப வாழ்க்கையில், ஒருவன் சந்திக்கும் அழுத்தங்களைத் தான், உருமாற்றம் கதை பேசுகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு இளைஞனாலும், இக்கதையில் வரும் சாம்சாவோடு தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.
*
ஆங்கிலத்தில் 'Kafkaesque' எனும் சொல் உண்டு. திகில் மற்றும் பதட்டம் நிறைந்த பயங்கரமான ஒரு கனவு உலகை அது குறிக்கிறது. காஃப்காவின் பெரும்பாலான கதைகள், இப்படிப்பட்ட ஒரு சூழலின் பின்னணியில் தான் எழுதப்பட்டிருக்கும். உருமாற்றம் கதையும் அதற்கு விதிவிலக்கல்ல.
கனவுலகை, நிஜ உலகத்தோடு கைக்கோர்க்க வைக்கும் முயற்சியே இந்த உருமாற்றம்.
உருமாற்றம் கதையை, உளப்பகுப்பாய்வின் தந்தையான சிக்மண்ட் பிராய்ட்டின்,'The Theory Of Mind' கோட்பாடுடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.
பிராய்ட்டின் 'The Theory of Mind' படி, நாம் ஒவ்வொருவருக்கும்,
1. 'Conscious Mind' (நனவு)
2. 'Unconscious Mind' (நனவிலி) என இருவகையான உளப்படிமுறைகள் இருக்கிறன.
இதில் நனவிலி (Unconscious Mind) என்பது, நம்முடைய அடக்கப்பட்ட விருப்பங்கள் அல்லது உணர்வுகளைக் குறிக்கிறது. அவை, எப்போதும் மனதின் அடி ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். எப்போதெல்லாம் அது விழிக்கிறதோ, அப்போதெல்லாம் உடலிலும் மனதிலும் சில சிராய்ப்புக் காயங்களை அது உண்டு பண்ணும். அப்படியான ஒரு காயம் தான், உருமாற்றம்.
கதையில் வரும் முதல் வரியைப் பாருங்கள்:
'One morning, as Gregor Samsa was waking up from anxious dreams, he discovered that in the bed he had been changed in to a monstrous verminous bug...'
இதில்,'கனவுகளில் இருந்து எழுந்தான்...' என்பதை, சாம்சா அவனுடைய நனவிலி மனதில் இருந்து எழுந்தான் எனப் புரிந்துகொள்ளலாம். இப்படி சாம்சாவினுடைய அடிமனதின் கதவு, கதையின் முதல் வரியிலேயே திறக்கப்படுகிறது. சாம்சா இறக்கும் வரையில் இதே நனவிலி உலகில் தான் கதை நகர்கிறது.
உருமாற்றத்தில் வரும் சாம்சா வேறு யாருமில்லை, காஃப்காவே தான். சாம்சாவின் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, தன்னுடைய கதையைத் தான் எழுதியிருக்கிறார் காஃப்கா.
'காஃப்கா', 'சாம்சா' - இரண்டு சொற்களும் உச்சரிப்பில் ஒன்று போலவே இருக்கின்றன. காஃப்கா எப்படி குடும்பக் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேற நினைத்தாரோ, அதேயே தான் சாம்சாவும் நினைக்கிறான்.
காஃப்காவின்,'தந்தை வெறுப்பு' இக்கதையிலும் வெளிப்படுகிறது. தந்தை, அவன் மீது எரியும் ஆப்பிளின் மூலம் தான் சாம்சா ஊனமாகிறான். 'என்னுடைய எல்லா வகையான ஊனத்துக்கும் நீ தான் காரணம்' என தந்தையைப் பார்த்து காஃப்கா சொல்வது போலவே இருக்கிறது கதையில் வரும் இந்நிகழ்வு.
காஃப்காவை உளவியல் ரீதியாக அணுக, தன்னுடைய தந்தைக்கு அவர் எழுதியக் கடிதங்களை ஆராய்ந்தாலே போதும். தனிமை, வெறுமை, குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை என அவருக்கிருந்த அக உணர்வுகள் எல்லாமே அக்கடிதங்களில் வெளிப்பட்டிருக்கும்.
சொல்லப்போனால், 'The Metamorphosis' எழுத அடித்தளமாக இருந்ததே அக்கடிதங்கள் தான்.
ஒரு கடிதத்தில்,'இரவு நேரத்தில் அடிக்கடி உங்களை எழுப்பி தண்ணீர் கேட்பேன். அதைத் தொந்தரவாகக் கருதிய நீங்கள், இரவு முழுக்க என்னைத் தனியாக பால்கனியில் நிற்க வைத்தீர்கள். பிள்ளை வளர்ப்புப் பற்றிய புரிதலே உங்களுக்கு இருந்ததில்லை...'என வெளிப்படையாகவே தந்தையைக் குற்றம் சாட்டுகிறார் காஃப்கா.
தந்தையை மட்டுமல்ல. ஒட்டு மொத்தக் குடும்பக் கட்டமைப்புகளையே முழுவதுமாக வெறுத்தார் அவர். 'குடும்பம் தான் என்னுடைய நிரந்தர எதிரி...' என்றார். இந்த மனப்பான்மை தான் அவருடைய எல்லா படைப்புகளிலும் வெளிப்பட்டிருக்கும். 'திருமணம் செய்துகொண்டால் தந்தையாக வேண்டும். எனவே எனக்குத் திருமணமே வேண்டாம்...' என்பதே அவருடைய நிலைப்பாடாக இருந்தது.
உருமாற்றம் கதையில் கூட தன்னுடயை குடும்பத்தைப் பகடியாக விமர்சிக்கும் விதத்தில் ஒரு வரி வரும்: 'என்ன இன்று வழக்கத்திற்கு மாறாக நம்முடைய குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கிறதே?'. இவ்வளவு தான் குடும்பம் மீது காஃப்காவுக்கு இருந்த மதிப்பீடு.
ஆனால், தன்னுடைய சகோதரிகளின் மீது காஃப்காவுக்கு அளவு கடந்த அன்பு இருந்திருக்க வேண்டும். உருமாற்றம் கதையில், கிரிட்டை எப்படியாவது இசைப் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என ஆசைப் படுகிறான் சாம்சா. கதை முழுக்க தங்கை மீது பரிவு கொள்கிறான். பூச்சியாக மாறியிருக்கும் அண்ணனுக்கு, கிரிட் தான் உணவு தருகிறாள். ஆனால், கதையின் முடிவில் அவளும் சாம்சாவை வெறுக்கிறாள்.
உச்சமாக,'இது சாம்சா தான் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நாம் அப்படி இதுவரையில் நம்பி வந்தது தான் இத்தனை துன்பத்துக்குக் காரணம். அந்தப் பூச்சி முதலில் வெளியே போக வேண்டும்...' என கிரிட் கத்தும்போது, சாம்சா முழுவதுமாக உடைந்து போகிறான். மறுநாள் இறந்தும் விடுகிறான்.
காலம் முழுக்க இப்படி குடும்ப உறவுகளுடன் போராடவே காஃப்காவுக்கு நேரம் சரியாக இருந்திருக்கிறது.
காஃப்கா, 1883 ஆம் ஆண்டு - ஜூலை மாதம் மூன்றாம் நாள் பிறந்தார். யூதரான இவர், சிறுவயது முதலே மிகவும் இறுக்கமான குடும்ப சூழ்நிலையில் தான் வளர்ந்திருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம், அவருடைய தந்தை.
காஃப்காவின் தந்தையின் பெயர் ஹெர்மன். இவர் ஒரு வணிகர். மகனான காஃப்காவை ஒரு வழக்கறிஞராக உருவாக்க வேண்டும் என்பதே ஹெர்மனுடைய ஆசை. ஆனால் காஃப்காவின் எண்ணம் வேறாக இருந்தது. இலக்கியம் மீதிருந்த பெருங்காதலால், தான் ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்றே காஃப்கா நினைத்தார். தந்தையின் வற்புறுத்தல் காரணமாக சட்டம் படித்தார். ஆனால், அதில் அவருக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை. ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் சில காலம் வேலை பார்த்த அவர், கிடைக்கும் சொற்ப நேரங்களில் எழுதினார்.
காஃப்காவின் எழுத்தை, ஹெர்மன் அங்கீகரிக்கவில்லை. தான் எழுதிய முதல் கதை பத்திரிகையில் பிரசுரமானபோது, அதை ஒரு பொருட்டாகவே காஃப்காவின் தந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றொரு குறிப்பு இருக்கிறது. காஃப்காவின் ஒவ்வொரு முன்னெடுப்புகளுக்கும், அவருடைய தந்தை ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்திருக்கிறார். இதனால், காஃப்காவுக்கு தந்தையின் மீது அதீத வெறுப்புணர்வு இருந்திருக்கிறது.
காஃப்காவுக்கு, பெண்களுடனும் ஒரு சிக்கலான உறவே இருந்திருக்கிறது. இரண்டு முறை திருமணம் வரை சென்று, காதலித்தப் பெண்ணை அவரால் கரம் பிடிக்க முடியவில்லை. இறுதி வரையில் அவருக்குத் திருமணம் ஆகவே இல்லை.
காஃப்காவின் நெருங்கிய நண்பர், மாக்ஸ் பிராட். அவருடன் தான் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை காஃப்கா பகிர்ந்து கொள்வார். 1912 ல், மாக்ஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தற்கொலை வரை சென்றுவிட்டேன் எனவும் காஃப்கா குறிப்பிட்டிருக்கிறார்.
காசநோய் ஒருபக்கம் நுரையீரலை அரித்துக் கொண்டிருக்க, மன அழுத்தம் மறுபக்கம் உச்சியை அடைந்தது. இப்படி உடலளவிலும் மனதளவிவும் கடுமையான பாதிப்புக்குள்ளான காஃப்கா, 1924 ஜீன் மாதம் மூன்றாம் நாள் இறந்தார்.
காஃப்கா, தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான எழுத்தாளர். தமிழ்நாட்டில் அவருக்குப் பரவலான வாசகர்கள் இருக்கிறார்கள்.
உருமாற்றம் கதையை சிலாகித்து, புதுமைப்பித்தனும் கா.நா.சு வும் உரையாடல் நிகழ்த்தி இருக்கிறார்கள். 'சாம்சாவின் தந்தை என்னுடைய தந்தையே...' என்றிருக்கிறார் எழுத்தாளர் மெளனி. காஃப்காவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 'உருமாற்றம்' கதையை அடிப்படையாகக் கொண்டு, 'மற்றொருவன்' என்கிற சிறுகதையை சமீபத்தில் எழுதியிருக்கிறார். எஸ். ராவின் இணையப்பக்கத்தில் இக்கதையை வாசிக்கலாம். இப்படி தமிழ் இலக்கியவாதிகளாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒரு எழுத்தாளர் தான் காஃப்கா.
சாம்சாவின் உருமாற்றம், அவனுக்கு ஒருவகையில் விடுதலையை தந்திருக்கலாம். ஆம்! எல்லாவகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை.
இனி அவன் காலை ஏழு மணிக்கு அவசர அவசரமாக துயில் எழவேண்டிய அவசியம் இல்லை. தலைமை எழுத்தர் முன்பு கைகட்டி நிற்க வேண்டியத் தேவை இல்லை. குடும்பத்திற்காக மாடு போல உழைக்க வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தந்தையிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இப்படி ஒரு கதையை எழுதி, தன்னைத்தானே விடுவித்துக் கொண்டிருக்கிறார் காஃப்கா என்பது தான் உண்மை. மன அழுத்தம் மிதமிஞ்சும் வேளையில், 'நாமும் சாம்சா போல ஒரு கரப்பான் பூச்சியாக உருமாறிவிட்டால் என்ன?' என்றே தோன்றுகிறது.
சரி, நீங்கள் திடீரென ஒரு கரப்பான் பூச்சியாக உருமாறினால் என்ன செய்வீர்கள்?
-சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...