பராமரிப்பு பணிகள் - வரும் 17ம் தேதி புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் - அடுத்தது என்ன?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த செம்பியம் போலீஸார், கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட சிலரை முதலில் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி 28 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிளான் போட்டு கொடுத்தது பிரபல ரௌடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், இன்னொரு பிரபல ரௌடி சம்பவ செந்தில் எனத் தெரியவந்தது.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குன்றத்தூரைச் சேர்ந்த ரௌடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரௌடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் பிரபல ரௌடி சம்பவ செந்தில், கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தவிர மற்ற 27 பேர் சிறையில் உள்ளனர். அதைத் தொடர்ந்து 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, சென்னை எழும்பூர் நீதிமனறத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.
போலீஸார் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிக்கையின் நகல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை 5,000 பக்கங்கள் என்பதால் 27 பேருக்கும் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கைதானவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை விரைவில் தொடங்க உள்ளது.
இதுகுறித்து செம்பியம் போலீஸாரிடம் பேசினோம். ``பொதுவாக கொலை வழக்குகளின் விசாரணை அமர்வு நீதிமன்றத்தில்தான் நடக்கும். அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள், நேரில் பார்த்த சாட்சிகள், கொலைக்கு பயன்படுத்த பொருள்கள் என தடயங்களை சேகரித்து நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கிறோம்.
சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். சாட்சிகளை கலைக்காமலிருக்க கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். நீதிமன்றத்தில் என்னென்ன விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். எங்களிடம் உள்ள தடயங்களையும் சாட்சிகளையும் வைத்தே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும் என நம்புகிறோம். அதே நேரத்தில் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பிரபல ரௌடி சம்பவ செந்தில், அவரின் கூட்டாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக இருக்கும் சம்பவ செந்தில் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துவிட்டோம். சம்பவ செந்திலுடன் தொடர்பிலிருப்பவர்கள் எங்களின் ரகசிய கண்காணிப்பிலிருந்து வருகின்றனர். அதனால் எப்படியும் சம்பவ செந்திலைப் பிடித்து அவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையிலிருப்பதால் சில தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கூட்டாக திட்டமிட்டவர்களின் பிளான் குறித்த முழு தகவல்கள் குற்றப்பத்திரிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம். விரைவாக வழக்கை முடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...