Inbox 2.0 : Eps 10 - பலத்த காயங்களுடன் பத்தாவது நாளில்! | Cinema Vikatan
பாலய்யா வஸ்தாவய்யா - 11: 'ஜென்ம விரோதிகள் இல்ல; ஆனா..' - அண்ணன் மகன் மீது ஏன் ஈகோ பாராட்டுகிறார்?
எல்லோரும் கங்குவா பார்த்து 'கங்கு' போலக் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கிறீர்கள் தானே? அதை ஓரமாக வைத்துவிட்டு வேறொரு `கங்கு' பற்றி தெரிந்து கொள்ள ரெடியா..?
தெலுங்கு சினிமா உலகில் சாம்பல் பூத்த 'கங்கு' போலக் கனன்று கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இந்த எபிசோடில் சொல்லப் போகிறேன். ரெடி ஜூட்..!
அது பாலய்யாவுக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கும் இடையே கனன்று கொண்டிருக்கும் ஈகோ யுத்தம் பற்றியது. பொதுவாகத் தெலுங்கு சினிமா உலகில் உள்ள எல்லோருக்கும் இது நன்கு தெரிந்த ஒரு விவகாரம் தான். பொது இடங்களில் நேருக்கு நேர் இந்த இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது முகத்தைத் திருப்பிக் கொள்வது 'நகரம்' படத்தில் சுந்தர்.சியைப் பார்த்து, சைடு வாக்கில் நடந்து செல்லும் வடிவேலு போலக் கண்டும் காணாதுபோல நடப்பது என இருவரும் அடிக்கடி செய்து கொள்வது வாடிக்கை. இதை அவ்வப்போது படம் வரைந்து பாகம் குறிக்காத குறையாகப் பாடமே எடுத்துவிட்டன மீடியாக்கள்!
இவ்வளவுக்கும் இவர்கள் இருவரும் ஜென்ம விரோதிகள் அல்ல. ஜூனியர் என்.டி.ஆருக்குச் சொந்த `பாபாய்' (சித்தப்பா) தான் நம்ம பாலய்யா! தன் அண்ணன் ஹரிகிருஷ்ணாவின் மகன் மீது ஏன் ஈகோ பாராட்டுகிறார் பாலய்யா?
கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போம்...
இவர்கள் இருவருக்கும் இடையே அடிதடி அளவுக்குப் பிரச்னைகள் ஏதும் இல்லை. ரொம்ப சிம்பிளான ஈகே தான். அதற்குக் காரணம் பாலய்யாவின் அண்ணனும் ஜூனியர் என்.டி.ஆரின் அப்பாவுமான நந்தமூரி ஹரி கிருஷ்ணா தான்! `அட... இதென்ன கலாட்டா?'
ஆமாம். பாலய்யாவுக்கும் அவரது அண்ணன் ஹரி கிருஷ்ணாவுக்கும் சின்னதாய் ஒரு உரசல் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தது. இத்தொடரின் ஆரம்பத்தில் நானே சொல்லியிருக்கிறேன். 'திருவிளையாடல்' கதைபோல சகோதர்கள் இருவருக்கும் இடையே 'அப்பா என்.டி.ஆர் மீது யாருக்குப் பாசம் அதிகமாக இருக்கிறது?' என்ற ஈகோ போட்டி சிறுவயதிலிருந்தே இருந்திருக்கிறது. ஹரி கிருஷ்ணாவைத்தான் தன் கலை மற்றும் அரசியல் வாரிசாக உருவாக்கிட ஆசைப்பட்டார் சீனியர் என்.டி.ஆர். ஆனால், `குறுக்கே இந்த கௌஷிக் வந்தா?' என்பதைப்போல பாலகிருஷ்ணா மருத்துவம் படிக்காமல் ஜாலி பையனாக சினிமாவுக்குள் வந்ததும் குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமா உலகில் கொடி நாட்டியதும் ஹரி கிருஷ்ணாவுக்குக் கொஞ்சம் எரிச்சலைக் கொடுத்தது.
வெளியே, 'என் தம்பி பாலகிருஷ்ணா நல்லா நடிக்கிறான்!' என்று பேட்டிகள் கொடுத்தாலும், தான் அப்பாவுடைய கலை வாரிசாக வந்துவிட வேண்டும் என 'தொபுக்கடீர்' எனக் கலை உலகில் பிரவேசம் செய்தார் ஹரி கிருஷ்ணா. அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பிறகுக் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஹீரோவாக சில படங்கள் நடித்துப் பார்த்தார் ஹரி கிருஷ்ணா. 'சீதய்யா' என்ற படத்தில் சிம்ரனுடன் இவர் போட்ட குத்தாட்டம் இப்போது வரை ட்ரோல் மெட்டீரியலாக இருப்பது தனிக்கதை. என்னதான் அப்பா இடத்தைப் பிடிக்க ஹரி கிருஷ்ணா மெனக்கெட்டாலும் பாலய்யாவின் 'சார்மிங்' அழகின் முன்னால் ஹரி கிருஷ்ணாவின் `பப்பு' வேகவில்லை.
அதனால் தடாலடி அரசியல் பாதையில் தந்தையின் அடியொற்றிப் போய்விட்டார். அப்பா என்.டி.ஆர் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் அரசியல் யாத்திரை போனபோது அந்தக்காரை ஓட்டும் சாரதியாக ஹரி கிருஷ்ணாதான் இருந்தார். என்.டி.ஆர் அரசியல் சுற்றுப் பயணங்களுக்காக ABR 7776 என்ற எண் கொண்ட பச்சை வண்ண `செவ்ரெலெட்' மெகா சைஸ் கார் ஒன்றைக் கடைசிவரை வைத்திருந்தார். அந்தக் காரில் தந்தை என்.டி.ஆருக்கு 75,000 கி.மீ ஓட்டியது சாட்சாத் ஹரி கிருஷ்ணாவே தான். பொதுவாக ஆந்திர மக்களுக்கு அர்ஜுனருக்குச் சாரதியாக மகாபாரதத்திலிருந்த பகவான் கிருஷ்ணரின் வாழும் அவதாரமாக என்.டி.ஆரைப் பார்ப்பார்கள். அவருக்கே சாரதியாக இருந்த அவர் புதல்வர் ஹரிகிருஷ்ணாவைப் பார்க்காமல் இருப்பார்களா..?
என்.டி.ஆர் புகழோடு சீரும் சிறப்புமாய் தெலுங்கு தேசக் கட்சியை வழிநடத்திய காலகட்டத்தில் என்.டி.ஆரின் மகன் ஹரி கிருஷ்ணாவையும் பார்க்கக் கூட்டம் அலைமோதியது. 1996–1999 காலகட்டத்தில் இந்துப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாலை மற்றும் போக்குவரத்துத்துறையின் அமைச்சராகவும் பதவி வகித்தார். இப்படி அப்பாவின் நிழலில் காட்டுச் செடிபோல வளர்ந்தவர் ஹரி கிருஷ்ணா!
அப்பா எடுத்த பெர்ஷனல் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் உடன்பாடில்லாமல் அவரை முறைத்துக்கொள்ளவும் செய்தார். பெண்களுக்குப் பேருந்தில் நடத்துநர் பணி நியமனம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
ஆனாலும், தனக்குப் பெரிதாய் எதுவும் செய்யவில்லை என்று அப்பாவுக்கு எதிராக ஒரு கட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் கலகம் செய்தார் ஹரி கிருஷ்ணா. ஏற்கனவே சந்திரபாபு நாயுடு பெரிய அளவில் புரட்சி செய்து கட்சியைக் கைப்பற்ற மெனக்கெட்ட சூழலில் ஹரி கிருஷ்ணாவும் அவரோடு சேர்ந்து கொள்ள, சுலபமாய் என்.டி.ஆரின் ராஜாங்கம் முடிவுக்கு வந்தது. என்.டி.ஆர் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார் தன் மருமகனே தன் அரசியல் வாழ்வுக்கு இறுதி அத்தியாயம் எழுதுவார் என்று!
ஆனால், சந்திரபாபு நாயுடுவோடு ரொம்ப நாட்கள் 'கட்சிப் பாசம்' நீடிக்கவில்லை. முட்டல் மோதலை அவருடன் தொடர்ந்த ஹரி, புதிதாய் 1999-ல் 'அண்ணா தெலுங்கு தேசம் பார்ட்டி' என்ற கட்சியைத் துவங்கி அப்பாவின் மறைவுக்குப் பின், அப்பா புகழ் பாடினார். ஆனாலும், அந்தக் கட்சி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வரலாறு காணாத தோல்வியைக் கண்டு துடைத்தெறியப்பட்டது.
இந்த சூழலில் ஹரி கிருஷ்ணாவுக்கு மேலும் இடியாய் விழுந்தது சந்திரபாபு நாயுடுவோடு பாலகிருஷ்ணா உறவு கொண்டாடியது. `குடும்பத்துக்குள் பாம்பைப் போல நுழைந்தவர் சந்திரபாபு நாயுடு. அவரை விட்டு என்னிடம் வா!' என்று உரிமையாய் தம்பி பாலய்யாவை அழைத்தும் பார்த்தார் ஹரி கிருஷ்ணா. ஆனால், கடப்பாரையை எடுத்து நெஞ்சில் சொருகியதைப் போல அடுத்த அதிர்ச்சியை ஹரி கிருஷ்ணாவுக்குப் பரிசளித்தார் பாலய்யா!
அது வேறொன்றுமில்லை... தன் மகள் நர பிரமாணியை சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷுக்குத் திருமணம் செய்து வைத்து சம்பந்தியாக பாலய்யா மாறியது ஹரி கிருஷ்ணாவைத் தூங்க விடவில்லை. துரோகி லிஸ்ட்டில் சந்திரபாபு நாயுடுவோடு சேர்த்து பாலய்யாவின் பெயரையும் எழுதிக் கொண்டார் ஹரி!
தன்னால் முடியாததை தன் மகனால் முடியும் என்று நம்பி மகன் தாரக ராமா ராவைத் திரையுலகில் வளர்த்துவிட மெனக்கெட்டார். தாத்தா என்.டி.ஆரோடு குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் உள்ள தாரக ராமா ராவை எளிதில் சினிமா உலகம் அரவணைத்துக் கொண்டது. இதில் ரொம்பவே மகிழ்ந்தார் ஹரி கிருஷ்ணா
7-வது வயதில் ஹரி கிருஷ்ணாவின் மகன்... தன் பேரன் தாரக ராமா ராவ் என்ற பெயரை ஜூனியர் என்.டி.ஆர் என மாற்றி தன்னோடு வாரிசாய் சொல்லாமல் சொல்லிவிட்டு மறைந்தார் என்.டி.ஆர். தன்னைத்தான் ஜூனியர் வாரிசு என நினைத்த பாலய்யாவுக்குத் தன் தந்தை, அண்ணன் மகனை அப்படி அழைத்தது இனம்புரியாத கோபத்தை பாலய்யா மனதில் விதைத்து விட்டது. அந்த வெறுப்பின் நீட்சியைத்தான் தன்னையும் அறியாமல் அவ்வப்போது காட்டிவிடுகிறார் பாலய்யா.
அதிலும் குறிப்பாக, எங்காவது பொது மேடைகளில் பாலய்யாவும் ஜூனியர் என்.டி.ஆரும் ஒன்றாக இருக்கும்போது ஜூனியர் என்.டி.ஆரைப் புகழ்ந்து யாரேனும் கோஷம் எழுப்பினால் கோபப்படுவார் பாலய்யா. பதிலுக்கு 'ஜெய் பாலய்யா... ஜெய் ஜெய் பாலய்யா' என்ற கோஷத்தை தன் ரசிகர்கள் அல்லது கட்சி அபிமானிகள் எழுப்பினால் ஹேப்பி மோடுக்குப் போய்விடுவார் பாலய்யா! சிம்பிள் லாஜிக் இது.
தன் சகோதரர் ஹரி கிருஷ்ணா சாலை விபத்தில் இறக்கும் நாளுக்கு முந்தைய வாரம் கூட ஒரு விழாவில் நேருக்கு நேர் சந்தித்தபோதும் பார்த்துக்கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனவர்கள்தான் இருவரும்.
பாலகிருஷ்ணாவுக்குத் தன் தந்தை என்.டி.ஆர் மீது பாசம்தான். ஆனாலும் தன் மாமா சந்திரபாபு நாயுடு மீது அதிக மரியாதை இருக்கிறது. போதாக்குறைக்குப் பொண்ணு கொடுத்து சம்பந்தி ஆனதும் கூடுதல் மரியாதையினை வாரி வழங்குகிறார்.
"அப்பாவுக்கு மாமா செய்தது துரோகமே இல்லை. கட்சியைத் தீய சக்திகளிடம் தன் அந்திமகாலத்தில் ஒப்படைக்கப் பார்த்தார் அப்பா. அதைப் பொறுப்பாகத் தெலுங்கு தேச கட்சியின் நலனுக்காக மீட்டெடுத்த மீட்பர்தான் சந்திரபாபு நாயுடு. மற்றவர்கள் சொல்வதைப்போல இதில் துரோகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்பா மீது பக்தி இருக்கும் எந்த மகனும் என் பாதை வழி தான் நடப்பான்!" என்று புதுவிதமான விளக்கத்தைச் சொல்கிறார் பாலய்யா.
அதேபோல ஹரிகிருஷ்ணா விபத்தான அன்று அலறியடித்தபடி வந்து மருத்துவமனை முன் முதல் ஆளாய் நின்றார் பாலய்யா. அன்று முழுவதும் ஹரி கிருஷ்ணாவின் குடும்பத்தின் அருகே நின்று அவர்களைத் தேற்றியபடி நின்றார் பாலய்யா. சகோதரர்களின் சண்டையினை ஊதிப்பெரிதாக்கிய மீடியாக்களே, 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என இந்த ரத்த பந்தத்தைப் பற்றி புகைப்படங்களோடு தலைப்புச் செய்தியாக்கின.
ஜூனியர் என்.டி.ஆர் மீது அதன்பிறகு கோபத்தை விட்டுவிட்டார். ஆனாலும், நெருக்கமாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஜூனியர் என்.டி.ஆருக்குச் சித்தப்பா மீது கோபம் எல்லாம் இல்லை. தன் தந்தையின் கோபத்துக்கு மதிப்பளித்தார் அவ்வளவே. அதனால் நேரடியாகக் கருத்து சொல்லாமல் தவிர்ப்பது, சித்தப்பாவின் விழாக்களில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது என ஒதுங்கியே இருந்தார்... இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் சேர்த்து படமோ, விளம்பரமோ எடுத்துவிடலாம் என்று இன்றுவரை தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறது டோலிவுட்!
இந்த ஆண்டு என்.டி.ஆரின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதுகூட தனித்தனியாகத்தான் அவரவர் குடும்பத்தோடு வந்து சென்றார்கள். காரணம் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரே நேரத்தில் வந்தபோது பாலய்யா- ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஆகிப்போனது.
ஒரு கட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் நந்தமூரி கல்யாண் ராம் (ஹரிகிருஷ்ணாவின் முதல் மனைவி மகன்) கனிந்த பழமாகச் சித்தப்பாவையும், சகோதரனையும் ஒரு விழாவுக்கு வரவழைத்து கைகளைக் கோர்த்தபடி போஸ் கொடுத்து உலகத்துக்கு மெஸேஜ் சொன்னார்.
"அப்பா போனபிறகு சித்தப்பாதான் எங்களை அப்பா ஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார்!" என்று நெக்குருகி கல்யாண் ராம் பேச, தலையினை ஆட்டி அதை ஆமோதித்தார் ஜூனியர் என்.டி.ஆர். ஆனாலும் கல்யாண் ராமைப் போல செண்டிமெண்ட்டாய் உருகி எதுவும் பேசவில்லை. அவருக்குள் ஏதோ ஒன்று பாலய்யா மீது அன்பினைப் பொழியத் தடங்கலாக இருக்கிறது. அது சந்திரபாபு நாயுடுவா அல்லது அப்பாவா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும், பாலய்யா Vs ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கிடையேயான ரசிகச்சண்டை மட்டும் தீர்ந்தபாடில்லை. பொதுவாக அதிகம் உணர்ச்சி வயப்படும் கேரக்டரான பாலய்யா நினைத்திருந்தால் பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்கும்.
ஒரு மேடையில் தன் மகனைப்போல நினைத்து ஜூனியர் என்.டி.ஆரை கட்டியணைத்து வாஞ்சையோடு முத்தமிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால், பாலய்யா இன்றும் தன்னை சூப்பர் ஸ்டாராக நினைப்பதால் அப்படிச் செய்ய ஈகோ தடுக்கிறது.
சந்திரபாபு நாயுடு மீது பேரன்பை பாலய்யா பொழிய இன்னொரு ஸ்பெஷல் காரணமும் இருக்கிறது. அது...
(தூள் பறக்கும்...)
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...