இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு ப...
பாலய்யா வஸ்தாவய்யா 9: 'கன்டி சுப்புதோ சம்பேஸ்துரா..!' - மொரீசியஸில் பாலய்யா கொடுத்த நிஜ 'பன்ச்'
தன்னை கேவலமாகத் திட்டும் பாலய்யாவை மட்டும் ஜெகன்மோகன் ரெட்டி கடிந்து கொண்டதே இல்லை..? காரணம் என்ன தெரியுமா..?
ஆம்... நீங்கள் யூகித்தது சரிதான். சினிமாவில் ஜெகனுக்குப் பிடித்த ஹீரோ பாலய்யா தான். பிடித்த நடிகர் என்று சொல்வதைவிட தன் ஆரம்பக்கால வெறித்தனமான ரசிகர் என்றும் கூட ஜெகனைச் சொல்லலாம். அவருடைய படங்கள் எல்லாவற்றையும் மிஸ் பண்ணாமல் பலமுறை பார்த்திருக்கிறார். முதல்வராக இருந்தபோதும்கூட பாலய்யா படத்தை நேரம் ஒதுக்கிப் பார்ப்பது ஜெகனின் வழக்கம். கல்லூரி நாட்களில் கடப்பாவில் பாலகிருஷ்ணா ரசிகர் மன்றத்தின் தலைவராகத் தீவிரமான விசிறியாகச் செயல்பட்டவர்தான் ஜெகன் மோகன் ரெட்டி.
இதனால்தான் நேரில் சந்திக்கும்போதும், ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளும் போதும், பாலய்யாவைப் பார்த்துப் புன்னகைப்பார் ஜெகன். பாலய்யாவே முறுக்கிக்கொண்டு நின்றாலும் புன்னகைப்பதை நிறுத்தியதில்லை. ஜெகன்மோகனைப் பொறுத்தவரை பாலய்யா ஒரு சற்றே வளர்ந்த குழந்தை!
பாலய்யா தன்னைக் கடுமையாக விமர்சிப்பதைக் கேள்விப்பட்டும் ஒருநாளும் பாலய்யாவைத் திட்டி ஜெகன்மோகன் ரெட்டி ஸ்டேட்மெண்ட் விட்டதில்லை. அவரது டார்கெட் முழுக்க சந்திரபாபு நாயுடு மீதுதான் இருக்கும். ஆனால், பாலய்யா மீது துளிகூட வன்மத்தைப் பொதுவெளியில் காட்டியதே இல்லை.
பாலய்யாகூட தேர்தல் பிரசாரத்தில், ``ஒருவாட்டி விளையாட்டா ஒரு சின்னப் பையனை முதல்வர் நாற்காலியில் உட்கார வெச்சுட்டீங்க... இனி அந்தத் தப்பை மக்கள் செய்யக்கூடாது... ஒன் டைம் ஜெகனுக்கு எண்ட் டைம் ஸ்டார்ட் ஆகிடுச்சு!'' என்று சொன்னபோதும் சரி, "மென்ட்டல், சைக்கோ'' என்று ஒருமையில் வசைபாடியபோதும் ஜெகன்மோகன் ரெட்டி பதிலுக்கு பாலய்யா மீது கோபப்பட்டதே இல்லை.
பொதுவெளியில் பாலய்யா பற்றிப் பேசக்கூடாது என்ற தெளிவான முடிவை எடுத்திருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, பாலய்யாவைக் கூல் செய்ய அதிரடியாக விஜயவாடாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாவட்டத்துக்கு 'என்டிஆர் மாவட்டம்' என்று பெயரிட்டிருக்கிறார்.
பாலய்யாவுக்கு ஒருவகையில் ஜெகன்மோகனின் அணுகுமுறை சங்கடத்தைக் கொடுத்தாலும், பரம எதிரியாக ஜெகனைப் பாவிப்பதில் பின்வாங்கவில்லை.
``அரசியல் வேறு சினிமா வேறு... என் ரசிகராய் இருப்பதால் அவர் முதல்வராய் இருப்பதாலோ என் அரசியலிலிருந்து நான் பின்வாங்கப்போவதோ இல்லை. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். எனக்கு இதில் பெருமையும் இல்லை... வருத்தமும் இல்லை!'' என்று சொல்லி 'தக் லைஃப்' கொடுத்திருக்கிறார்.
பாலய்யா என்றதும் அனிச்சையாய் ''உர்ரே... கட்டுலதோ கடுரா... கன்டி சுப்புதோ சம்பேஸ்துரா!'' போன்ற தெலுங்கு 'பன்ச்'கள் தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். நிஜமாகவே அவர் 'பன்ச்' கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆச்சரியமா இருக்கா..? பாலய்யாவோடு பழகியவர்களுக்கு இது பழைய சங்கதி தான்!
ஏற்கனவே தயாரிப்பாளரைத் துப்பாக்கியால் `சுட்டு' கையைச் `சுட்டுக்கொண்ட' பாலய்யா 'பன்ச்'களால் பலபேரை மிரட்டியிருக்கிறார். அப்படி பாலய்யாவின் `பன்ச்'களால் பீதியில் சிலருக்குப் பேதியான சம்பவங்களும் உண்டு. ஆனால், பாலய்யா நமக்கு `பன்ச்' கொடுக்க மாட்டாரா என ஏங்குபவர்களும் உண்டு. 'என்னடா கண்ணா ரொம்ப குழப்புறே?' என்கிறீர்களா..? வாங்க டீட்டெய்லா சொல்றேன்!
பாலய்யாவுக்கு கோபம் வந்தால் முகத்துக்கு நேராக காட்டிவிடுவார். சில சமயங்களில் அதீத கோபத்தில் வினோதமாக ஒன்று செய்வார். சுவற்றில் ஓங்கி 'கும்'மென்று ஒரு கும்மாங்குத்து விடுவார். நம்மைப் பார்த்துச் சிரிப்பார். 'என்னாச்சு?' என்று நாம் குழப்பத்தோடு சிரித்தால், 'இது உங்க முகத்துல விழ வேண்டியது சார்... தவறுதலா சுவத்துல குத்திட்டேன்!' என்பார். நினைச்சுப் பாருங்க... அத்தனை பெரிய 'மாஸான' ஆள், அவ்ளோ ஃபோர்ஸா முகத்துல குத்துவிட்டா என்னாகும்னு? கண்டிப்பாக இதைப் படிக்கும் இயக்குநர்கள் யாராவது இதையே மாஸ் சீனாக ஹீரோக்களுக்கு வெச்சுப் பாருங்க. செம மாஸா இருக்கும்!
ஒருமுறை பாலய்யா தன்னுடைய உதவியாளர் பாலாஜியின் வீட்டு விசேஷத்துக்குப் போயிருந்தார். ஹைதராபாத்தின் புறநகர்ப்பகுதியிலிருந்தது அவ்வீடு. முழுக்கவே சிரஞ்சீவியின் கோட்டை அது. வெறித்தனமான ரசிகர்கள் நிரம்பிய பகுதி அது. திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் சிரஞ்சீவியின் புகழ்பாடும் வாக்கியங்களும், படங்களும் நீக்கமற நிறைந்திருந்ததால் காரில் போகும்போது பாலய்யாவுக்கு செம டென்ஷன்.
பாலய்யாவின் டிரைவரும், கூடவே வந்த தெலுங்கு தேசக்கட்சி உறுப்பினர் ஒருவரும், ''சார்... ஒரு இடத்தில்கூட உங்க முகத்தைக் காணலையே சார்? இது ஹைதராபாத்தா இல்லை... இஸ்லாமாபாத்தா?'' என மேலும் தூபம் போட, கோபமான பாலய்யா, தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு, ``பாலாஜி இருக்குற தெருவுக்குப் போனா நம்ம பவர் என்னனு தெரியும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கடா!'' எனக் கோபமாகியிருக்கிறார்.
ஆனால், பாலாஜி வீட்டில் வேறொரு ட்விஸ்ட் மூவருக்கும் காத்திருந்தது. பாலாஜியின் குடும்பமே சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்கள். வீட்டில் ஃபிரேம் பண்ணி மாட்டியிருந்த திருமண வாழ்த்து மடலிலும் `முட்டா மேஸ்திரி' சிரஞ்சீவி பாலய்யாவைப் பார்த்துச் சிரித்தவண்ணம் இருந்தார். பாலாஜியும் பாலாஜியின் தம்பியும் மாபெரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ரசிகர் மன்ற உறுப்பினர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வசித்த தெருவெங்கும் சிரஞ்சீவிக்கு பேனரும் தோரணங்களும் கட்டியிருந்தன.
அப்புறமென்ன, பாலய்யாவுக்கு இது போதாதா..? செம டென்ஷனானவர், ``டேய் எங்கிட்ட வேலை பார்த்துட்டு வேற எங்கேயோ விசுவாசமா இருந்துருக்கேல்ல... எவ்வளவு தைரியம்டா உனக்கு? இனி வீட்டுப் பக்கம் வராதே... அப்படி வர்றதா இருந்தா உன் ஃபேமிலிகிட்ட `இனி எப்போதும் வீட்டுக்கு வரமாட்டேன்'னு சொல்லிட்டு வா!'' என்று அதிரடியாய் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். போகும்போது ஸ்டைலாக சுவற்றில் ஒரு குத்து விட்டு, ''இது உங்க பையன் முகத்தில் விழ வேண்டியது. தவறுதலா சுவத்துல குத்திட்டேன்!'' என்று `பன்ச்' கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
'இனி எப்போதும் வரமாட்டேன்னு வீட்டுல சொல்லிடுன்னா கொன்னுடுவேன்னு நேரடியா மிரட்டியிருக்கார்.' எனத் தப்பாக டி-கோட் பண்ணிப் பார்த்து பயந்தேவிட்டது பாலாஜியின் குடும்பம். பாலய்யாவும் வேணாம் அவர் கொடுத்த வேலையும் வேண்டாம் என வீட்டில் இருந்துகொண்டார் பாலாஜி. அப்புறம் பாலய்யா அலுவலகத்தின் அழைப்பையும் பயத்தினால் எடுக்கவில்லை. மூன்று நாட்கள் தன் வீட்டுப்பக்கம் வராததால், பாலய்யாவே போன் பண்ணி கடைசியில் லைனில் வந்த பாலாஜியிடம் விசாரித்திருக்கிறார். ``வந்தால் திரும்ப உயிரோடு வீட்டுக்குப் போக முடியாதுன்னு நீங்கதானே சொன்னீங்க?'' என்று அப்பாவியாய் கேட்டிருக்கிறார் பாலாஜி.
``நீ `என் வீட்டுல ஒருத்தனா இரு'ங்கிற தொனியில சொன்னதுடா மென்ட்டல்!'' என்று புரியவைத்து பாலாஜியை அசடு வழியச் செய்திருக்கிறார் பாலய்யா.
`சுவற்றில் விட்டால் தானே கன்பியூஸ் ஆகுது. அடுத்தவாட்டி மாத்திக்கிறேன்' என பாலய்யா செய்த இன்னொரு சம்பவம் பற்றிச் சொல்கிறேன்...
கொஞ்சம் காஸ்ட்லியான சம்பவம் அது.
சில மாதங்களுக்கு முன் பாலய்யா ஓய்வெடுக்கத் தனியாளாக மொரீசியஸுக்குப் போயிருந்தார். எப்போதாவது தடாலடியாக இப்படிச் செய்வதுண்டு.
``ஒரேமாதிரி லைஃப் போயிட்டு இருக்குறது ரொம்ப போரடிக்குது. அதான் டிராவல் பண்ணி ரெப்ரெஷ் பண்ணிக்குறேன்!'' என்று சொல்வார். ஆனால், மறக்காமல் அவரது பெர்ஷனல் மேக்-அப் மேனுடன் தான் செல்வார். கூடவே அவரது பாதுகாப்புக்காக இரண்டு பாதுகாவலர்களும் சென்றிருந்தனர். அந்த இரண்டுபேரும் அவர் தங்கியிருந்த அதே ஓட்டலின் கீழ்த்தளத்தில் தங்கியிருந்தனர். பத்தாவது மாடியில் அழகான ஸூட் ரூமில் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்தவருக்கு அவர் தங்கியிருந்த ஓட்டல் லானில் பாலய்யாவின் தீவிர ரசிகர்கள் மூன்று பேரிடம் சிக்கிக் கொண்டார். ஐ.டி-யில் வேலை பார்க்கும் சைபராபாத்தைச் சேர்ந்த மூவர், வான்டடாக அறிமுகமாகிப் பேசியிருக்கிறார்கள். அவர்களின் அன்புக்காக நீச்சல் குளத்தின் ஓரத்தில் நின்றபடி செல்பிக்கு போஸ் கொடுத்திருக்கிறார் பாலய்யா.
அதையே அட்வான்டேஜாக எடுத்துக்கொண்ட மூவர் அணி சம்பிரதாய செல்பி, மரத்தைச் சுற்றி கைகளைக் கோர்த்ததுபோல் பாலய்யாவை சுற்றி நின்று செல்பி என டென்ஷன் படுத்திவிட்டனர். கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் பேசியவர், கிளம்ப எத்தனித்தார். அப்போது அவர்களில் ஒருவர்,
``பாலய்யா காரு... இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க... ஏன் இன்னிக்குப்பூரா எங்ககூட நீங்க டைம்பாஸ் பண்ணக்கூடாது?'' என்று கேட்டு அன்புத்தொல்லை கொடுத்திருக்கிறார். அதோடு, ``அந்தப் படத்துல ஒரு டான்ஸ் போடுவீங்களே... அந்த ஸ்டெப்பைப் போட்டுக் காட்டுங்க... நீங்க இந்த நீச்சல் குளத்துல இருக்குற தண்ணிய விரலால காய வெச்சுக் காட்டுங்க!'' என இஷ்டத்துக்கு டாஸ்க்கும் கொடுத்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப்பார்த்த பாலய்யா தன் செல்போனில் தன் பாதுகாவலர்களை அழைத்திருக்கிறார். நல்ல பகல் தூக்கத்தில் இருந்த அந்த இரண்டு பேரும் அலறியடித்தபடி ஓடி வந்து பாலய்யா முன் நின்றிருக்கிறார்கள்.
`என்ன பாலய்யாவுக்கு அன்டக்கொடுத்து மூணு பசங்க நிக்குறானுங்க..? எதுவும் பிரச்னையா..?' என்று குழப்பம் அவர்கள் கண்களில்! அருகில் வந்து நின்றதும் தான் தாமதம். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் இருவர் மீதும் காட்ட ஆரம்பித்தார் பாலய்யா. இரண்டு அறைவிட்டு நீச்சல் குளத்திற்குள் பறக்கவிட்டிருக்கிறார். 'தொபுக்கடீர்' என அவர்கள் விழுந்ததும் தான் தாமதம். மூன்று ஐ.டி பசங்களும் சிட்டாய் பறந்துவிட்டனர்.
'ஆத்தாடி... நிஜமாவே இந்த ஆளு கோபக்கார கோங்குரா தான்!' என நினைத்திருப்பார்கள். பொறி கலங்கிய பாதுகாவலர்கள் இருவரும் தொப்பலாய் நனைந்தபடி கோழிபோல் நீருக்குள்ளிருந்து மேலே வந்திருக்கின்றனர். ஒட்டுமொத்த ஓட்டல் சிப்பந்திகளும் அந்த ரியல் பாலய்யா ஃபைட்டைப் பார்த்து ஷாக் ஆகி நின்றனர்.
`அடுத்து மிதிப்பாரோ?' என்ற பயத்தோடு நடுங்கியபடி அந்த ரெண்டுபேரும் பாலய்யா பக்கத்தில் வந்து நின்றனர்.
அவர்களைப் பார்த்து டக்கென குரலை மாற்றி, ``தம்பிகளா... அண்ணனைப் பார்த்து பயந்துட்டீங்களா..? எனக்கு வேற வழி தெரியலைடா. மூணு பேரும் என்னை ரொம்ப படுத்தி எடுத்துட்டானுகடா. சின்னப்பசங்களை அடிக்க முடியாதுல்ல... அதான் அவங்களை அடிக்கிறதா நினைச்சு உங்களை அடிச்சேன். என்ன இருந்தாலும் நீங்க என் செல்லத் தம்பிகள் தானடா? மன்னிச்சுக்கங்க ப்ளீஸ்!'' என்று செல்லமாய் தாடையைப் பிடித்துக் கொஞ்ச ஆரம்பித்தார். இவரின் இந்த பன்ச்சிங் பேக் டெக்னிக்கைத் தெரிந்து கொண்டு, அவர் அடித்த அடிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாய் எகிறிப்போய் விழுந்தவர்கள் தான் இரண்டுபேரும். ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி என ஒவ்வொரு அடிக்கும் பரிசுத்தொகையும் கொடுத்து குஷிப்படுத்தியிருக்கிறார் பாலய்யா!
ஊருக்கே `பன்ச்' கொடுத்த பாலய்யாவுக்கு `பன்ச்' கொடுத்தவரைத் தெரியுமா?
(பன்ச் பறக்கும்...)
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...