பாலய்யா வஸ்தாவய்யா 10: "அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க..!" - பாலய்யாவையே பதற வைத்த நடிகை
`பாலய்யாவுக்கு பன்ச் கொடுத்த ஆள்' என்றவுடன் அவரின் `லெஜண்ட்' பட ரயில்வே யார்ட் ஃபைட் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
ஏனென்றால் பாலய்யாவுக்கு அப்படி பன்ச் கொடுக்கும் அளவுக்கு தெலுங்கு சினிமா இன்டெஸ்ட்ரியில் யாரும் இல்லை... நினைத்துப் பார்க்கவும் தைரியம் இல்லை! நம்ம கேப்டன் விஜயகாந்த்துக்கு மட்டும் இல்லை, பாலய்யாவுக்கும் 'ஷமாபனா ' (மன்னிப்பு) என்ற வார்த்தை பிடிக்காது. சிறுவயது முதலே பாலய்யா யாரிடமும் எதுக்காகவும் மன்னிப்பு கேட்டதே இல்லை. தந்தை என்.டி.ஆரே இவரின் பிடிவாதம் அறிந்து இவரைச் சமாளிக்க ரொம்பவே மெனக்கெடுவார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வளர்ந்த பாலய்யா, தந்தையிடம் மன்னிப்பு கேட்காதவர் என்றால்... கூட நடிப்பவர்களிடம் பாலய்யா கேட்பாரா என்ன..?
இரண்டு படங்களில் ஒன்றாய் நடித்த ராதிகா ஆப்தேவுக்கும் பாலய்யாவுக்கும் எக்கச்சக்கமாக ஈகோ முட்டிக்கொண்டது. தெலுங்கு சினிமா உலகில் பாலய்யா படங்களின் படப்பிடிப்பில் சில விஷயங்கள் தவறாமல் நடக்கும். பாலய்யாவுக்கென பிரத்யேக கேரவன் இருக்கும். அந்தக் கேரவனுக்குள் யாருக்கும் அனுமதி கிடையாது. உதவியாளரேக்கூட பாலய்யா அழைக்காமல் உள்ளே செல்ல மாட்டார். அதேபோல பாலய்யா ஷூட்டிங் வந்தால் எல்லோரும் எப்போதும் அலெர்ட் மோடுக்கு போயிடுவார்கள்.
வயதில் குறைந்தவர்கள் என்றால் பாலய்யா வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். 'எழுந்திருக்க வேண்டாம்!' என்று செல்லமாகக் கடிந்து கொள்வார். உட்கார்ந்தபடி, 'நமஸ்காரம் அண்ணய்யா!' என்றால் டபுள் உற்சாகமாகி கையெடுத்துக் கும்பிட்டுச் செல்வார். ஆனால், யாராவது தன்னைக் கண்டு கொள்ளாமல் அசால்ட்டாக டீல் செய்தால் கண்டிப்பார். அப்படித்தான் ராதிகா ஆப்தே செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டு பாலய்யா வந்ததைக் கவனிக்கவில்லை. கோபம் தலைக்கேறிய பாலய்யா, உடனே கூப்பிட்டு தன்மையாகச் சொல்லியிருக்கலாம்.
ஆனால், பாலய்யா அவசரப்பட்டு, தலையில் தட்டி 'ஹாய்' சொல்ல, என்ன கோபத்தில் இருந்தாரோ ராதிகா ஆப்தே பொரிந்து தள்ளிவிட்டார். 'இப்படி அடிக்கிற வேலைலாம் வேணாம்!' என முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கடுகடுத்தார். ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் ஷாக்கோ ஷாக்!
பாலய்யா முன் அதிர்ந்து பேசக்கூட தயக்கம் காட்டும் இன்டஸ்ட்ரியில் முதல்முறை பாலய்யாவை ஹை-பிட்ச்சில் கோபத்தோடு கடிந்து கொண்டது ராதிகா ஆப்தேவாகத்தான் இருக்கும். சற்றும் இந்த `வார்த்தை பன்ச்'சை பாலய்யா எதிர்பார்க்கவே இல்லை.
`தலையில் தட்டுனதுக்கு ஸாரி கேளுங்க!' என்று ராதிகா ஆப்தேவைத் தவிர யார் கேட்டிருந்தாலும் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். ஆனால், பாலய்யா சிரித்தபடி சென்றுவிட்டார். ஆனால், இந்தக் களேபரங்கள் எதுவும் திரையில் தெரியாத வண்ணம் ஆன் ஸ்க்ரீனில் அசத்தலாக நடித்தனர். ஆனால், அன்று படத்தின் இயக்குநர் பொயப்பட்டி ஶ்ரீனு மட்டும் இல்லையென்றால் பாலய்யா ஆக்ரோஷமாக ராதிகாவைத் திட்டித் தீர்த்திருப்பார். கிட்டத்தட்ட காலில் விழாத குறையாக பொயப்பட்டி ஶ்ரீனுதான் பாலய்யாவை கேரவனுக்குள் தாஜா செய்து கூல் பண்ணினார்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு பாலய்யா யாரையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்டுகொள்வதே இல்லை. தானுண்டு தன் வேலையுண்டு மோடுக்கு போய்விட்டார். ஆனால், 'லெஜண்ட்' சம்பவம் காட்டுத்தீயாய் வேறுமாதிரி பரவ, பாலய்யாவின் இமேஜ் கொஞ்சம் டேமேஜ் ஆனது. அதனால், பாலய்யா ஈகோவைவிட்டு முதல்முறை இறங்கிவந்தார். அடுத்த படம் 'லயன்' ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது, இயக்குநர் சத்யதேவிடம் சொல்லி இன்னொரு கேரக்டரை டெவலப் செய்யச் சொல்லி படத்தில் அது கட்டாயம் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஏற்கனவே த்ரிஷா லீட் ரோலில் நடித்துக்கொண்டிருக்கும்போது, சரயு என்ற இன்னொரு நாயகியாக ராதிகா ஆப்தே கேரக்டரை உருவாக்கி படத்தில் சேர்க்கப்பட்டது. படப்பிடிப்பில் ராதிகா ஆப்தேவுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் பாலய்யா. தனக்கும் ராதிகா ஆப்தேவுக்கும் ஒன்றும் பிரச்னையில்லை என்று காட்டிக்கொள்ள பாலய்யாவே போட்ட திட்டம் அது!
ஆனாலும், ராதிகா ஆப்தேவுக்கும் அவருக்குமான சண்டை ஆன்-ஸ்க்ரீனில் தீரவில்லை. அது அப்படியே திரையில் தெரிந்தது. படமும் பெரியளவில் ஹிட்டடிக்கவில்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு கேரவனுக்குள் ஓய்வெடுத்துவிட்டு சரியாகத் தன்னை அழைக்கும்போது மட்டும் வெளியே வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டார் பாலய்யா.
இதோடு பாலய்யா பற்றி சில சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாலய்யா தன் படங்களில் பெரிய சைஸில் `ஃபார்ச்சூனர்', `போர்டு எண்டீவர்' போன்ற கார்களில் வலம் வருவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரது பெரு விருப்பமான கார்கள் பி.எம்.டபுள் யூவும், பென்ட்லே வகை கார்களும்தான். சமீபமாக தன் மகள்கள் இருவரும் சேர்ந்து தனக்கு வாங்கித் தந்த பென்ட்லே காரைத்தான் பயன்படுத்துகிறார். கார்களைப் பொறுத்தவரை அவர் சொல்லும் ஸ்டேட்மெண்ட் வித்தியாசமானது.
``நாம் பயன்படுத்தும் கார் நம்மைவிட உயரம் குறைச்சலாக இருக்க வேண்டும். அதுதான் பார்க்க ஸ்டைலாக இருக்கும். திரைப்படங்களில் ஏன் பெரிய கார்களைப் பயன்படுத்துகிறேன் என்றால், நான் இல்லாத காட்சிகளிலும்கூட நான் இருப்பதைப் போன்ற தோற்றத்தை பெரிய வகைக் கார்கள் வரவழைத்துவிடும் என்பதால் மட்டும் தான்!'' என்று சொல்லும் பாலய்யா, `லெக்சஸ் எல்.எம் 350 ஹெச்' என்ற பெரிய மாடல் காரையும் வாங்கியிருக்கிறார். அதை குடும்பத்தோடு வெளியே செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துகிறார்.
0001 என்ற எண்ணைத்தான் தான் பயன்படுத்தும் எல்லா கார்களிலும் பயன்படுத்துகிறார். அதேபோல தன்னுடைய கார்கள்தான் என்றாலும் ஸ்டைலாக வேகமாகச் சாத்தி விட்டெல்லாம் இறங்க மாட்டார். நிகழ்ச்சிக்கு எத்தனை வேகமாகச் செல்ல வேண்டுமென்றாலும் மிதமான வேகத்தில் தான் காரை ஓட்டச் சொல்வார். கார் கதவை மெதுவாகச் சத்தம் எழுப்பாமல் சாத்திவிட்டுதான் இறங்கிச் செல்வார். உதவியாளர்கள் யாராவது காரைச் சாத்தினால் செம டென்ஷனாகிவிடுவார்.
``வாகனமும் கடவுள் அவதாரம்தான். நம்மை அழைத்துச் செல்லும் காரை நாம் கடவுளுக்கு நிகராக மதிக்க வேண்டும். வாகனங்களுக்கும் ஒரு ஆன்மா இருக்கு!'' என்று சொல்வார் பாலய்யா. தன் அண்ணன் ஹரி கிருஷ்ணா சாலை விபத்தில் பலியான சம்பவம் பாலய்யாவே ரொம்பவே பாதித்தும் விட்டது.
இதுதவிர சில விஷயங்களில் ரொம்பவே பிடிவாதமாக இருப்பார். காரைப் பின்தொடர்ந்து விரட்டி வருவது, கூட்டத்தில் செல்பி எடுப்பது, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது, குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொல்வது போன்ற விஷயங்களைச் செய்தால் ஆங்க்ரி பேர்டாகி விடுவார்.
``உன் குழந்தைக்கு நீ தான்டா பேர் வைக்கணும் சம்பேஸ்தா!'' என்று செல்லமாக ரசிகர்களிடம் கடிந்து கொள்வார். காரைத் துரத்தி வந்தால், ''நீ என்ன நாயா... காருக்குப் பின்னால வர்றே... முண்டுகாவு..?'' என்று நின்று அதட்டுவார். செல்பி எடுக்க வேண்டுமென்றால் முறைப்படி கேட்டு எடுக்க வேண்டும். இல்லையென்றால் நம்ம ஊர் மார்க்கண்டேயர் சிவக்குமார் போல செல்போனை தட்டி விடுவார்.
அதிகாலை 3.30 மணிக்கு `டாண்' என்று எழுந்துவிடுவார். உடற்பயிற்சிகளும் குளியலும் முடிந்தபின் வெள்ளை வண்ண ஆடைகளை அணிவார். மற்ற வண்ணங்களில் அவர் ஆடைகள் அணிகிறார் என்றால், நிச்சயம் அது தன் மகள்கள் வாங்கிக் கொடுத்ததாகத்தான் இருக்கும். வேலையாட்கள் தூங்கி வழிந்தால் இவருக்குப் பிடிக்காது. தன்னைப்போலவே நேரத்துக்குத் தூங்கி நேரத்தோடு எழ வேண்டும் என எதிர்பார்ப்பார்.
தான் ஒரு பொருளை எடுத்து உபயோகித்துவிட்டு சரியாக அதே இடத்தில் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மறுநாள் தான் பொருள்வைத்த இடத்தில் தேடும்போது அது கிடைக்காவிட்டால் டென்ஷன் ஆகிவிடுவார். இதனாலேயே அவர் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் அபார ஞாபகசக்தியோடு இருந்தாக வேண்டிய கட்டாயம் உண்டு. தாக்குப்பிடிக்காமல் பாதியில் வேலையைவிட்டு நின்றவர்களும் உண்டு. ஆனால், தாக்குப்பிடித்து வேலையில் நிலைத்தவர்களுக்கு ராஜ யோகம் தான். அடிக்கடி டிப்ஸ் கொடுத்து குஷிப்படுத்துவார். வேலையாட்களுக்குத் தனி வீடு, வெளியே சென்றுவர தனி கார் என அசத்திவிடுவார். தன் சொல் பேச்சைக் கேட்டு நடப்பவர்களுக்குப் பரிசுகளை வாரி இறைப்பார். அதற்காகவே அவருடைய செல்லமான பன்ச்களைத் தாங்கிக் கொள்வார்கள்.
தன்னுடைய இமேஷ் மீது அதிக கவனம் உள்ளவர் பாலய்யா. இப்போதெல்லாம் தலையில் விக் வைக்காமல் எங்கேயும் செல்வதில்லை. அதேபோல 'டச்-அப்' செய்துவிட்டுதான் வெளியில் கிளம்புவார். இந்த விஷயத்தில் அவருக்குப் பெரியப்பா எம்.ஜி.ஆர் தான் இன்ஸ்பிரேஷன்.
பாலய்யாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிபட்டு விட்டால் போச்சு. தூக்கமே வராது அவருக்கு. ``இமேஜ் தான் நடிகனுக்கு முக்கியம். அது போச்சுன்னா ஒண்ணுமே இல்லை..!'' என்பார். தனக்கு அடிபட்ட விஷயத்தை எப்போதும் வெளியில் தெரிவதை விரும்ப மாட்டார் பாலய்யா. நம்மை கடவுள் போல நினைக்கும் ரசிகர்கள் மத்தியில் கையிலோ காலிலோ பேன்டேஜ் கட்டு போட்டுக்கொண்டு போட்டோக்கள் மீடியாவில் வெளியானால் இமேஜ் போய்விடும் என்று உறுதியாக நம்புவார்.
இதனால் அதுபோன்ற தருணங்களில் மும்பையிலிருந்து ஸ்பெஷல் செக்யூரிட்டி ஏஜென்சி ஆட்களை வைத்து, சிகிச்சையெடுக்கும் மருத்துவமனையை அண்டர்-கன்ட்ரோலில் வைத்துக் கொள்வார். தன் பக்கத்தில் யாரையும் அண்டவிடாமல் `தனித்து' இருப்பார்.
ஆனாலும், பட்ட காலிலே (பன்ச்) படும் என்பதைப்போல ஒருமுறை அவருக்கு அடிபட்டு விட்டது. ஆனால், சினிமா ஷூட்டிங்கில் இல்லை. 'குழியை வெட்டி குழியை மூடும்' உயற்பயிற்சி டெக்னிக்கை நடைமுறைப்படுத்தும்போது, மூடி வைக்கப்படாத ஒரு குழியில் தவறி விழுந்துவிட்டார். காலில் தசை பிடித்துக் கொண்டது. அசைத்தால் வலி பின்னி எடுத்தது.
அந்த நேரத்தில் ஒரு பிரபலமான மசாலா பட இயக்குநரின் மாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் பாலய்யா. படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட சூழலில் ஹாயாக வீட்டில் குழிவெட்டிய பொழுதில்தான் தாராந்து விட்டார்.
ஷூட்டிங்கிற்கான அழைப்பு வந்தது. பாலய்யாவுக்குத்தான் அடிபட்ட விஷயத்தை இயக்குநரிடம் சொல்ல மனமில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் டூப் வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என கிளம்பி வந்து விட்டார். ஆனால், அன்றைய முதல் ஷாட்டே காலைத் தூக்கி எதிராளியை உதைத்து அந்தரத்தில் பறக்க விட வேண்டும் என்ற கொடூர டாஸ்க்.
ஆனால், பாலய்யாவுக்கு காலைத் தூக்கினாலே கடுத்தது. கவிழ்த்துப்போட்ட `ப' போல காலை அகட்டி வைத்துக் கொண்டு நின்று பன்ச் பேசியபடி சமாளித்தார். இப்போது காலைத் தூக்கி உதைக்க வேண்டும். ரோப் கட்டி தொங்கவிட்டு ஷாட்டை எடுத்தார்கள். ரிகர்சலில் வலியைப் பொறுத்துக்கொண்டு ஓரளாவது காலைத் தூக்கியவர், மெயின் டேக்கில் எதையோ செய்யப்போக, 'ச்சிர்ர்க்' என்று ஏதோ சத்தம் கேட்டது.
`அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க!' என பாலய்யா மனதிற்குள் நினைத்திருப்பார். வலியில் கண்ணில் ஜலம். இயக்குநருக்கு ஒரு பக்கம் டென்ஷன், இன்னொரு பக்கம் கடுப்பு!
``எந்துக்கு சார் இதி... ஸ்மால் ஃபைட் சார்... ஒரிஜினல் பாலய்யா வஸ்தாவா?'' என்று உரிமையோடு கடிந்து கொள்ள, கோபத்தின் உச்சத்துச் சென்றார் பாலய்யா.
``உர்ரே... என் காலு போச்சுடா... இங்கே பக்கத்துல வாடா தொங்கன கொடுக்கா!'' என்று இயக்குநரை சன்னமான குரலில் அழைத்து ஓங்கி ஒரு அறைவிட்டார். ஒரு நொடியில் பொறி கலங்கிப் போனார் அந்த இயக்குநர்.
(பொறி பறக்கும்...)
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...